

காவல் துறையினரிடம் இருந்து தப்பிய ரவுடி ஜானி மற்றும் அவரது மைத்துனரும் காயங்களுடன் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வண்டறந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானி என்ற ஜானி பால்ராஜ் (33). கொலை, ஆள் கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் என 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர். காட்பாடி, வேலூர் வடக்கு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு தலைமறைவானார். அவரை பிடிக்க முடியவில்லை.
காட்பாடி பகுதியில் சகஜமாக நடமாடி வந்த ஜானி, சர்வதேச இணைய அழைப்புகள் மூலம் வேலூரில் உள்ள முக்கிய தொழிலதிபர்களை லட்சக் கணக்கில் பணம் கேட்டு மிரட்டி பறித்து வந்தார். இவரை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர் பல கட்டங்களாக நடத்தி வந்த விசாரணையில் எந்த முன் னேற்றமும் ஏற்படவில்லை.
வேலூர் மாவட்ட காவல் துறையினருக்கு சவால் விட்டு தொடர்ந்து மிரட்டி பணம் பறித்து வந்தார். ஜானியின் மனைவி மற்றும் உறவினர்கள் சிலரையும் காவல் துறையினர் கைது செய்தும் பிடிக்க முடியவில்லை. சில காவல் துறை அதிகாரிகள் ஜானிக்கு உதவியதால் தனிப்படையினரின் நடவடிக்கையில் இருந்து அவர் தப்பி வந்தார். எனவே, நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலமாக அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுத்தனர்.
இதற்கிடையில், வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் உத்தரவின் பேரில் ஜானியை பிடிக்க புதிய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. புதிய கோணத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பெங் களூருவில் பதுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பெங்களூருவில் முகாமிட்டிருந்த காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். தேவை ஏற்பட்டால் அவரை சுட்டுப் பிடிக்கவும் அனுமதி பெற்றிருந்தனர்.
இருவரும் தப்ப முயன்றனர்
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஜானி மற்றும் அவரது மைத்துனர் மைக்கேல் (30) ஆகியோர் பதுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த வீட்டை காவல் துறையினர் சுற்றிவளைத்தபோது இருவரும் தப்ப முயன்றனர்.
அப்போது, ஜானி என்னை காப்பாற்றுங்கள் என கூறியபடி வீடியோ ஒன்றை பதிவு செய்து அவரது குடும்பத்தினருக்கு அனுப்பினார். இருப்பினும் காவல் துறையினர் துரத்திச் சென்றதில் ஜானி, மைக்கேல் ஆகியோர் சுவர் தாண்டும் போது இருவருக்கும் கை, கால்களில் முறிவு ஏற்பட்டது.
பின்னர், இருவரையும் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதித்தனர். அங்கு, காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.