Published : 13 Nov 2020 07:24 PM
Last Updated : 13 Nov 2020 07:24 PM

தீபாவளி சிறப்புப் பேருந்துகள்; 3 நாட்களில் 3.14 லட்சம் பேர் பயணம்: 91,000 பேர் முன்பதிவு

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சிறப்புப் பேருந்துகள் மூன்று நாட்களாக இயக்கப்பட்டு வருகிறது. இதில் இன்று மதியம் வரை 3.14 லட்சம் பேர் பயணித்துள்ளனர் என அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பேருந்து போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பயணிக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் சென்னையின் 5 மையங்களிலிருந்து இயக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்தது.

தீபாவளிக்கு முன் நவம்பர் 11, 12,13 ஆகிய தேதிகளிலும் தீபாவளிக்கு மறுநாள் 15,16,17,18 ஆகிய தேதிகளிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 24/10/2019 முதல் 26/10/2019 வரை கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம், அண்ணாநகர் மேற்கு மாநகரப் பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், மாநகரப் போக்குவரத்துக் கழக கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய ஐந்து இடங்களிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,275 பேருந்துகளுடன், 4,436 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 11,111 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த இயக்கத்தின் வாயிலாக, 6,70,630 பயணிகள் தங்களின் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்தனர்.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவ.11 முதல் 13 வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,000 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 3,510 பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக, சென்னையிலிருந்து 9,510 பேருந்துகள், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,247 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 14,757 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி கடந்த மூன்று நாட்களில் சிறப்புப் பேருந்துகளில் பொதுமக்கள் அதிக அளவில் கிளம்பிச் சென்றனர்.

போக்குவரத்துத் துறையின் சார்பில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புப் பேருந்துகளில் இன்று (13.11.2020) மாலை 3 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,000 பேருந்துகளில் 1,308 பேருந்துகளும், 371 சிறப்புப் பேருந்துகளுமாகக் கடந்த (11.11.2020 முதல் 13.11.2020) இன்று மாலை 3 மணி வரையில் மொத்தம் 6,869 பேருந்துகளில் 3 லட்சத்து,14 ஆயிரத்து, 613 பயணிகள் பயணித்துள்ளனர்.

மேலும் இதுவரை 91,198 பயணிகள் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இது குறைவு என்றாலும் கரோனா ஊரடங்கால் ஐடி ஊழியர்கள் அதிக அளவில் பணியாற்றாதது, பல நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது, பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் செயல்படாதது போன்ற பல காரணங்களால் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்பட்டதன் அடிப்படையில், 60% பயணிகள் பயணித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x