

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பரவலாக பலத்த மழை பெய்தது. சாலைகள், தெருக்களில் மழைநீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 28-ம் தேதி தொடங்கிய போதிலும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் இந்த ஆண்டு மழை பொய்த்துவிடுவோம் என விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு 11 மணி முதல் பரவலாக மழை பெய்தது. அதிகாலை நேரத்தில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதுபோல காலை முதல் மாலை வரை அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி நகரின் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியது.
சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் ஸ்மார்ட் சாலைகளாக மாற்றும் பணி நடைபெறுவதால், மழை சாலையோர பகுதிகளில் தேங்கியது. இதனால்
பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்தனர். தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் வஉசி கல்லூரி முன்புள்ள பகுதியில் கரோனா ஊரடங்கை முன்னிட்டு தற்காலிக காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கியதால் காய்கறி கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் வியாபாரிகள் மற்றும் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் கடும் சிரமமடைந்தனர். இதேபோல் நகரின் அனைத்து முக்கிய சாலைகளிலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. மாநகராட்சி மற்றும் தீயணைப்பு படையினர் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி அகற்றும் பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டனர். இருப்பினும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் தண்ணீரை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகை நாளை (நவ.14) கொண்டாடப்படுகிறது. இதனால் கடைசி நேர வியாபாரம் இன்று நடைபெற்றது. ஆனால் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததாலும், சாலைகள், தெருக்களில் மழைநீர் தேங்கியதாலும் தீபாவளியை முன்னிட்டு பொருட்கள் வாங்க வந்த மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாயினர். கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள உப்பளங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின.
இதேநேரத்தில் தொடர் மழை காரணமாக கால்வாய், ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் குளங்கள், ஏரிகளுக்கு தண்ணீர் வரத் தொடங்கியது. இது விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):
திருச்செந்தூர் 18, காயல்பட்டினம் 11, குலசேகரன்பட்டினம் 4, விளாத்திகுளம் 0.6, கயத்தாறு 9, கடம்பூர் 9, மணியாச்சி 18, கீழஅரசடி 0.5, சாத்தான்களம் 5.2, ஸ்ரீவைகுண்டம் 57, தூத்துக்குடி 21 மி.மீ. மழை பெய்துள்ளது.