Published : 13 Nov 2020 04:11 PM
Last Updated : 13 Nov 2020 04:11 PM

வரத்து அதிகரிப்பதால் படிப்படியாக விலை குறையும் சின்ன வெங்காயம்  

தமிழகத்தில் சின்ன வெங்காயம் விலை சதமடித்து மக்களைத் திணறடித்த நிலையில், தற்போது வரத்து அதிகரிப்பதால் படிப்படியாக விலை குறையத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் பெரிய வெங்காய சந்தைகளில் திண்டுக்கல் வெங்காய சந்தையும் ஒன்று. திங்கள், புதன், வெள்ளிக்கிழமை என வாரம் மூன்று நாட்கள் மட்டும் இயங்கும் சந்தைக்கு பெரிய வெங்காயம் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் கரூர், அரியலூர், பெரம்பலூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வெங்காயத்தை மொத்தமாக கமிஷன் கடைக்காரர்கள் கொள்முதல் செய்கின்றனர்.

இங்கிருந்து சில்லறை விற்பனைக்கும், மொத்த விற்பனைக்கும் வாங்கிச்செல்கின்றனர். கடந்த ஒரு மாதமாக சின்ன வெங்காயம் விலை ஒரு கிலோ 100 ரூபாய் கடந்து விற்பனையானது.

அதிகபட்சமாக சில வாரங்களுக்கு முன்பு ரூ.120 க்கு விற்பனையானது. இந்த நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்து, வெங்காய இறக்குமதி செய்ய முடிவு செய்தது.

எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்தபோதும், தேவை அதிகரிப்பால் வெங்காயம் விலை சிறிதளவு குறைந்ததே தவிர வெகுவாக குறைந்து ரூ.100 க்கும் கீழ் விற்பனையாகவில்லை.

இந்தநிலையில் தற்போது வடமாநிலங்களில் மழை குறைந்து இயல்புநிலை திரும்பத்தொடங்கியுள்ளது. இதனால் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம், சின்னவெங்காயம் வரத்து படிப்படியாக அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயங்களும் இருப்பு இருப்பதால் வெங்காயம் விலை சற்றே குறைந்து விற்பனையாகிறது.

இதுகுறித்து திண்டுக்கல் வெங்காய ஏற்றுமதியாளர் கமிஷன் மண்டி வர்த்தகர் சங்கம் தலைவர் ஏ.வி.சவுந்திரராஜன் கூறியதாவது: வடமாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியதன் விளைவாக வெங்காயம் விலையில் சிலதினங்களாக இறங்குமுகம் காணப்படுகிறது.

இன்று சின்னவெங்காயம் மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ 50 முதல் 80 வரை விற்பனையானது. பெரியவெங்காயம் ரூ.60 வரை விற்பனையானது. வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி தொடர்வதால் சில தினங்களில் வெளிநாட்டு வெங்காயமும் மார்க்கெட்டிற்கு வரத்தொடங்கும்.

இருந்தபோதும் வெங்காயம் தேவை அதிகமாக இருப்பதால் தற்போதுள்ள விலையில் இருந்து சிறிதளவே குறையும். தற்போது நடவு செய்யப்பட்டுள்ள வெங்காயங்கள் விளைச்சல் அறுவடைசெய்து மார்க்கெட்டிற்கு வர இரண்டு மாதங்கள் ஆகும் என்பதால் நாம் எதிர்பார்க்கும் விளை குறைவு இதன்பின்னரே இருக்கவாய்ப்புள்ளது. அதுவரை ஒரு சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ. 50 க்கு மேல்தான் விற்கவாய்ப்புள்ளது, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x