

வேலூர் மாவட்டம், மூங்கிலேறி கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி முனிரத்தினம். 55 வயதான இவர், சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக சென்றார். அங்கு வீட்டு உரிமையாளரின் கொடுமை தாங்க முடியாமல் தப்பிக்க முயன்ற கஸ்தூரியின் கையை வெட்டிவிட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கஸ்தூரியை அங்கிருந்த சிலர், மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் கஸ்தூரியி்ன் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று தலைமைச் செயலகம் வந்த கஸ்தூரியின் மகன் மோகன், மகள் செல்வி மற்றும் உறவினர்கள் முதல்வர் தனிப் பிரிவில் மனு அளித்தனர். “சவுதியில் வீட்டு வேலைக்கு சென்ற எங்கள் தாய் கொடுமை படுத்தப் பட்டுள்ளார். எங்கள் தாயை மீட்டு தமிழகம் கொண்டுவர முதல்வர் உதவ வேண்டும்’ என்று தெரிவித்திருந்தனர்.