

நீரிழிவு நோய் பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக மதுரை சமுதாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் எஸ்.அமுதா தெரிவித்தார்.
மதுரை வேளாண் கல்லூரி வளாகத்தில் உள்ள சமுதாய அறிவியல் கல்லூரி மற்றம் ஆராய்ச்சி நிலையத்தில் உலக நீரிழிவு நோய் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மதுரை சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதல்வர் எஸ்.அமுதா தலைமை வகித்து பேசினார்.
அவர் பேசுகையில், ‘‘ஒவ்வோர் ஆண்டும் உலக நீரிழிவு நோய் தினம் ( World Diabetes Day) நவம்பர் 14-ம் தேதி உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மக்களிடையே அதிகம் பேசப்படும் நோய் நீரழிவு நோயாக (சர்க்கரை நோய்) இருக்கிறது. இன்சுலின் என்ற முக்கிய ஹார்மோன் உற்பத்தியாவதாலும், அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரழிவு நோய் ஏற்படுகிறது.
உலக அளவில் இந்தியா தான் நீரிழிவு நோய் பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது. பொதுவாக நீரிழிவு நோய் என்பதைப் பற்றிய விளக்கங்களை நோயாளிகள் மட்டுமில்லாமல் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
5 முதல் 7 சதவீதம் மக்கள் கிராமங்களிலும் 15 முதல் 20 சதவீதம் மக்கள் நகரத்திலும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அரிசி உணவு பல்வேறு வடிவங்களில், பலதரப்பட்ட மக்களால் முக்கிய உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இதற்கு மாற்றாக கோதுமை, தானிய வகைகள், பயறு வகைகள்; சிறுதானியங்கள் மற்றும் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றினை நமது அன்றாட உணவில் ஒரு முக்கிய அங்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் முறையான உடற்பயிற்சி மற்றும் நடைப் பயிற்சியினை தினசரி வழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும், ’’ என்றார்.
அரசு ராஜாஜி மருத்துவமனை காது மூக்கு, தொண்டை மருத்துவத்துறை பேராசிரியர் எம்.தினகரன் பேசுகையில், ‘‘இரண்டாம் நிலை சர்க்கரை நோய் உள்ளவர்கள் முறையான உணவுப்பழக்க வழக்கங்கள், மருந்துகள், தினசரி உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவைகள் மூலம் சர்க்கரை நோயினை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
அதீத தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதீத பசி, திட்டமிடப்படாத எடை இழப்பு, சோர்வு, மங்கலான பார்வை, மெதுவாக குணமாகும் புண்கள், அடிக்கடி தொற்று, பொதுவாக அக்குள் மற்றும் கழுத்தில் கருமையான சருமத்தின் பகுதிகள் ஆகியவை நீரழிவு நோயின் அறிகுறிகளாகும். பாதிக்கப்பட்ட நபர் சர்க்கரை அளவினை அடிக்கடி சரிபார்க்க வேண்டும்.
உணவுக்கு முன் சாதாரண சர்க்கரை அளவு 60 முதல் 110 மி.கி, டி.எல். வரையிலும், உணவுக்குப் பிறகு 80 முதல் 140 மி.கி, டி.எல் வரையிலும் இருக்கலாம்.
தானியங்கள், சிறுதானியங்கள், பயறுவகைகள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகள் வழக்கமான இன்சுலின் சுரப்பை மேம்படுத்துகிறது. மேலும் நீரழிவு நோய் வராமல் தடுக்கின்றன.
இப்போதெல்லாம் பரோட்டா, பீட்சா, பர்கர் மற்றும் சாட் போன்ற துரித உணவுப்பழக்கங்களை மாற்றுவது நம் உடலில் கொழுப்பை அதிகரிக்கிறது. இன்சுலின் சுரப்பைக் குறைக்கும்.
நீரிழிவு நோயினை அடுத்த தலைமுறைக்கு தானாகவே பரப்புகின்ற நவீன உணவுப் பழக்கங்களுக்கு செல்ல வேண்டாம், ’’ என்றார்.
மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் வி.கே.பால்பாண்டி கூறுகையில், ‘‘கரோனா கால சூழ்நிலையில் அதிகளவு இறப்புகளை கவனித்து பார்த்தால் பெரும்பாலும் சர்க்கரை நோய் உள்ளவர்களை அதிகமாகப் பாதித்துள்ளது. எனவே, இந்நோய் குறித்து அதிக விழிப்புணர்வுடன் மற்றும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டியது அவசியம், ’’ என்றார்.