

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, பயணிகள் பட்டாசுகளைக் கொண்டு செல்கிறார்களா என்று கோவை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தீபாவளிப் பண்டிகை நாளை (நவ.14) கொண்டாடப் படுகிறது. இதையொட்டி கோவை மாவட்டத்தில் பணிபுரியும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ரயில்கள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.
ரயில்களில் எளிதில் தீப்பற்றி தீ விபத்தை ஏற்படுத்தக்கூடிய பட்டாசு உள்ளிட்ட பொருட்களைக் கொண்டுசெல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார், தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளின் பைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையும் செய்யப்படுகிறது. ரயில் நிலையம் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது.
போலீஸாருக்கும் தெரியாமல் பட்டாசுகளை யாராவது ரயில்களில் கொண்டு சென்று பிடிபட்டால், அவை பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் ரயில் நிலையம் வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி மூலம் கைகளைச் சுத்தப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.