பல்கலைக்கழக பாடப்புத்தகத்திலிருந்து அருந்ததி ராயின் புத்தகத்தை நீக்குவதா? - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முடிவுக்கு எஸ்டிபிஐ கண்டனம் 

பல்கலைக்கழக பாடப்புத்தகத்திலிருந்து அருந்ததி ராயின் புத்தகத்தை நீக்குவதா? - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முடிவுக்கு எஸ்டிபிஐ கண்டனம் 

Published on

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடப்புத்தகத்திலிருந்து அருந்ததி ராயின் புத்தகத்தை நீக்கியதற்கு எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் பி.ஏ ஆங்கிலம் பட்டப்படிப்பில், இந்தியாவின் அறியப்பட்ட எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய் அவர்கள் எழுதிய “Walking with the Comrades” என்ற புத்தகம் பாடமாக உள்ளது.

மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட் இயக்கத்தினருடன் அருந்ததிராய் மேற்கொண்ட பயணம் குறித்து இந்த புத்தகம் விவரிக்கிறது. இந்த புத்தகம் கடந்த நான்கு வருடமாக பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு, மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தப் புத்தகத்தில் நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி, பாடத்திட்டத்திலிருந்து புத்தகத்தை நீக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்.ன் மாணவ அமைப்பான ஏ.பி.வி.பி., பல்கலைக்கழகத்திற்கு அரசியல் ரீதியாக கடும் நெருக்கடிகளை கொடுத்துள்ளது.

இதையடுத்து, பாடப்புத்தகத்தை நீக்குவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த முடிவை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிப்பதோடு, மாணவர்கள் எதைப் படிக்க வேண்டும் என்று அரசியல் ரீதியாக கொடுக்கப்படும் நெருக்கடிகளுக்கு அடிபணிந்து பாடத்திட்டத்தை முடிவு செய்தால், சமூகநீதியும், நாட்டின் பன்முகத்தன்மையும் கேள்விக்குறியாகிவிடும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றம்சாட்டுகிறது.

மேலும், எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்கள் எழுதியுள்ள “ Walking with the Comrades" புத்தகம், பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு, கல்விக்கான நிலைக்குழு , ஆட்சிக்குழு ஆகிய மூன்று கூட்டங்களிலும் விவாதித்து ஒப்புதல் பெற்ற பிறகுதான், 2017ம் ஆண்டு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதை நீக்குவதாக இருந்தாலும், சேர்ப்பதாக இருந்தாலும், அந்த குழு தான் அதை முடிவு செய்ய முடியும்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். மாணவ அமைப்பின் கோரிக்கையின் விளைவாக துணைவேந்தர் அவசர அவசரமாகவும், தன்னிச்சையாகவும் இந்த முடிவை எடுத்திருப்பது ஏற்புடையது அல்ல. இந்த முடிவு பல்கலைக்கழக பாடத்திட்டக்குழுவை மீறும் செயலாகும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றம்சாட்டுகின்றது.

எனவே, பல்கலைக்கழகத்தின் இந்த தன்னிச்சையான அறிவிப்பு உடனே ரத்துச் செய்யப்பட வேண்டும் என்றும், பல்கலைக்கழக நிர்வாகத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி கேட்டுக் கொள்கிறது. மேலும், தமிழக அரசும் இந்த அறிவிப்பு விஷயத்தில் கவனமெடுத்து, பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற அரசியல் ரீதியான தலையீடுகள் நடைபெறாமல் இருக்க கவனம் செலுத்த வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in