

அரசு நிலங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து புதுச்சேரி துத்திப்பட்டு கிராமத்தில் தனியார் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டியது தொடர்பாக எஃப்ஐஆர் பதிவுசெய்ய மாவட்ட ஆட்சியருக்குத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். ஸ்டேடிய உரிமையாளர் மீது பிசிசிஐயில் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துத்திப்பட்டு கிராமத்தில் தனியார் (Seichem) டெக்னாலஜி நிறுவனம் கிரிக்கெட் மைதானத்தை அமைத்துள்ளது. இங்கு ரஞ்சி போட்டிகள் உட்பட பல போட்டிகள் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறுகின்றன. இது அரசு நிலங்களையும், நீர்நிலைகளையும் ஆக்கிரமித்துள்ளதாக ஊசுட்டேரி பாதுகாப்பு இயக்கத்தினர் புகார் தெரிவித்தனர். ஏரி நிலத்தில் சாலைகள் அமைத்துள்ளதுடன், விதிகளை மீறி அரசு இடத்தில் பத்து ஆழ்குழாய் கிணறுகளைத் தோண்டியுள்ளதுடன், அரசு புறம்போக்கு இடங்களையும் ஆக்கிரமித்துள்ளதாகப் புகார் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, தாசில்தார் அருண் அய்யாவு நேரில் ஆய்வு செய்து அறிக்கையைக் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்துள்ளார். இங்கு டி-20 கிரிக்கெட் போட்டிகள் அண்மையில் தொடங்கின. தொடக்க நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (நவ. 13) வாட்ஸ் அப்பில் வெளியிட்ட தகவல்:
"புதுச்சேரியின் கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் அங்குள்ள தனியார் (Seichem) தொழில்நுட்பத் தனியார் நிறுவனத்தின் முழுச் செயல்பாடு மிக நெறிமுறையற்றது, சட்டவிரோதமானது. இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. துணைநிலை ஆளுநர் அலுவலகத்துக்கு இதுபற்றிய முழு ஆவணங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆட்சியர் அருணுக்கு அவசர நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது".
இவ்வாறு கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, ஆட்சியர் அருணுக்குப் பிறப்பித்துள்ள உத்தரவுக் கடித விவரம்:
"புதுச்சேரி துத்திப்பட்டில் தனியார் (Seichem) கிரிக்கெட் ஸ்டேடியம் அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது. அத்துடன் அதில் நீர்நிலை ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டுள்ளது ஆவணங்களில் தெரியவந்துள்ளது.
அதனால் அரசு நிலம் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். ஸ்டேடிய வளாகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடன் நிறுத்த வேண்டும். அனைத்துத் துறையினரும் ஆய்வு செய்ய வேண்டும். முக்கியமாக வருவாய்த்துறை, திட்டக்குழுமம், சுற்றுச்சூழல்துறை, உள்ளாட்சித்துறை, மின்துறை ஆகியோருடன் அவரவர் துறை விவகாரம் தொடர்பாகப் பார்வையிட்டு ஆய்வு செய்யுங்கள்.
விளையாட்டுப் போட்டித் தொடக்க விழாவில் கலந்துகொள்வதை நீங்கள் (ஆட்சியர்) தனிப்பட்ட முறையில் தவிர்த்திருந்தாலும், அங்குள்ள முழு விவரத்தை ஆளுநர் மாளிகைக்குத் தெரிவித்து எச்சரிக்கத் தவறிவிட்டீர்கள்.
ஸ்டேடியம் மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர் தாமோதரனின் இந்தச் சட்டவிரோதச் செயல்களையும் பிசிசிஐயின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன். இதனால் கிரிக்கெட் விளையாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது".
இவ்வாறு கிரண்பேடி தெரிவித்துள்ளார்.