

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவன விஞ்ஞானிகளான கு.ஹரி, து.புத்திரபிரதாப், ப.முரளி, அ.இ.ரமேஷ்சுந்தர் மற்றும் பா.சிங்காரவேலு ஆகியோருக்கு ‘மண் ஈரப்பதங்காட்டி’ என்ற ஆராய்ச்சி - கண்டுபிடிப்புக்காக தேசிய நீர் விருதை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், 2019-ம் ஆண்டுக்கான தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழாவை நவம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் டெல்லியில் நடத்தியது.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இவ்விழாவில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத், இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.
நேற்று (12.11.20) நடந்த விழாவில், சிறந்த ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புக்கான தேசிய நீர் விருதை (முதல் பரிசு) கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவன விஞ்ஞானிகளுக்கு இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா காணொலிக் காட்சியின் மூலம் வழங்கினார். இவ்விருதுடன் 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படுகின்றன.
“எப்போது நிலத்தில் நீர் கட்டுவது, எப்போது நீர் பாய்ச்சாமல் விடுவது என்று முடிவெடுப்பதில் மண் ஈரப்பதங்காட்டி (Soil moisture indicator) என்னும் இக்கருவி உதவி புரியும்” என இக்கருவியின் முதன்மைக் கண்டுபிடிப்பாளரும் பிரதான விஞ்ஞானியுமான முனைவர் கு.ஹரி தெரிவித்தார்.
மேலும், “மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து இக்கருவியில் வெவ்வேறு வண்ணங்களில் விளக்குகள் ஒளிரும். ஒளிரக்கூடிய வண்ணங்களின் மூலம் விவசாயிகள் நீர் கட்டுவதா, வேண்டாமா என முடிவு செய்து கொள்ளலாம். இக்கருவியைப் பயன்படுத்தி நீர் பாய்ச்சப்பட்ட கரும்பு வயலில் ஏக்கருக்கு 60.4 டன் மகசூலும், பயன்படுத்தாத வயலில் 55.8 டன் மகசூலும் கிடைத்தது” என்றும் அவர் கூறினார்.
இந்தக் கருவி குறித்த விரிவான செய்தி 21.01.2016 தேதியிட்ட ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியானது குறிப்பிடத்தக்கது.