

தீபாவளி பண்டிகையை குடும்பத் தினருடன் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து 2-வது நாளாக மக்கள் ஆர்வத்துடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்களின் வசதிக்காக 1,705 சிறப்புப் பேருந்துகள் உட்பட மொத்தம் 3,705 பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்து, ரயில், சொந்த வாகனங்களில் இதுவரை சுமார் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை நாளை (14-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி, புத்தாடை, பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக தமிழகம் முழுவதும் வர்த்தகப் பகுதிகளில் மக் கள் கூட்டம் அலைமோதியது. மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், நெல்லை உள் ளிட்ட நகரங்களில் கரோனா குறித்த அச்சத்தையும் மறந்து மக்கள் கூட்டம் கூட்டமாக கடை வீதிகளில் குவிந்தனர். சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட வர்த் தகப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக ஆடைகள், பொருட்கள் வாங்கும் மக்களின் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
சென்னையில் வசிக்கும் பெரும் பாலானோர் சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினருடன் தீபா வளியை கொண்டாடுவது வழக்கம். கடந்த 2 நாட்களாக சென்னையில் இருந்து ரயில்கள், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளில் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். நேற்று முன்தினம் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளி யூர்களுக்கு பயணித்தனர். நேற்று காலையில் மழை பெய்ததால் கோயம் பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் கூட்டம் சற்று குறைவாக இருந்தது. பிற்பகலுக்கு பிறகு படிப்படியாக கூட்டம் அதிகரித்தது.
கூட்ட நெரிசலை குறைக்க கோயம் பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் பிரித்து இயக்கப்பட்டன. பயணிகளின் வரு கைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் வரிசையாக இயக்கப்பட்டன. பயணி கள் அதிகமாக செல்லும் வழித்தடங் களை தேர்வு செய்து, கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து அலுவலர்கள் ஏற்பாடு செய்தனர்.
பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகள் உடல் பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் கோயம்பேடு, தி.நகர், பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் வெளியூர்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. இதே போல, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களி லும் பயணிகள் கூட்டம் இருந்தது. முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே ரயில் நிலையங்களின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
கரோனா பாதிப்பால் ஏற்கெனவே பல ஆயிரக்கணக்கான மக்கள் தங் களது சொந்த ஊர்களில் இருந்து பணியாற்றி வருகின்றனர். தீபாவளிக் காக பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். 2-வது நாளான நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரம் பேருந்துகளும், 1,705 சிறப்பு பேருந்து களும் இயக்க ஏற்பாடு செய்தோம். நீண்ட தூரம் செல்லும் மக்கள் மாலை 4 மணிக்கு பிறகே வரத் தொடங்கினர். பயணிகளின் வருகைக்கு ஏற்றார் போல், சிறப்புப் பேருந்துகளை வரிசையாக இயக்கினோம்.
பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல், விடிய விடிய பேருந்து களை இயக்க ஏற்பாடு செய்துள்ளோம். அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கடந்த 2 நாட்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அரசு பேருந்துகளில் மட்டும் பயணம் செய்துள்ளனர்.
ஏற்கெனவே அறிவித்தபடி, சென்னையில் இருந்து இன்று மேலும் 3,508 பேருந்துகள் இயக்கப் படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆம்னி பேருந்துகளில் பயணிகள் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. வழக்கமாக பண்டிகை காலங்களில் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். முன்பதிவு இல்லாத பெட்டிகளில் மூச்சுவிடக் கூட முடியாத அளவுக்கு கூட்டம் முண்டியடிக்கும். ஆனால், தற்போது முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், நெரிசல் இல்லாமல் மக்கள் பய ணித்தனர்.
அரசுப் பேருந்துகள், ரயில்கள், ஆம்னி பேருந்துகள் மட்டுமின்றி பலர் தங்கள் சொந்த வாகனங்களிலேயே ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னை யில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். போக்குவரத்து போலீ ஸார் கூடுதலாக பணியில் அமர்த்தப் பட்டு, சாலைகளில் நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பினர்.