

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் மகளுக்கும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுக்கும் நேற்று முன்தினம் இரவு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தை அடுத்த சுவாமிமலை அருகே உள்ள தனியார் ரிசார்ட்டில் நேற்று முன்தினம் இரவு டிடிவி.தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் ராமநாதன் துளசி அய்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
முன்னதாக மாப்பிள்ளை வீட்டார் சீர் வரிசை தட்டு எடுத்து வந்தனர். டிடிவி.தினகரனின் மனைவி அனுராதா மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்றார். கிருஷ்ணசாமி வாண்டையார், தங்கள் குடும்பத்தினரை டிடிவி.தினகரனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
நிச்சயதார்த்த விழா என்றால் பெண்ணையும், மாப்பிள்ளை யையும் ஒரே மேடையில் உட்கார வைத்து உறவினர்கள் அவர்களுக்கு பொட்டு வைத்து வாழ்த்துவது தற்போதைய வழக்கம். ஆனால், பழைய வழக்கப்படியும், பாரம்பரிய முறைப்படியும் பெண் மட்டுமே மேடையில் அமரவைக்கப்பட்டார். ஜெயஹரிணிக்கு உறவினர்கள் சந்தனம், பொட்டு வைத்து வாழ்த்தினர்.
மேடைக்கு எதிரே மாப்பிள் ளைக்காக அமைக்கப்பட்டிருந்த தனி நாற்காலியில் அமர்ந்து நிச்சயதார்த்த நிகழ்வுகளை மாப்பிள்ளை ராமநாதன் துளசி அய்யா பார்த்தார்.
டிடிவி.தினகரனின் தம்பி பாஸ்கரன், இளவரசியின் மருமகன் டாக்டர் சிவக்குமார், முன்னாள் எம்எல்ஏ எம்.ரெங்கசாமி உட்பட மொத்தம் 60 பேர் மட்டுமே நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டனர்.
விழாவில் பூண்டி துளசி அய்யா வாண்டையார், சசிகலாவின் தம்பி திவாகரன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.
ஜெயஹரிணி, ராமநாதன் துளசி அய்யா ஆகியோரின் திருமண விழாவை, சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்ததும் பெரிய அளவில் நடத்த மணமக்கள் வீட்டார் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக, திருமணத்தை உறுதி செய்யும் நிகழ்வு கடந்த ஜூலை 25-ம் தேதி புதுச்சேரியில் உள்ள டிடிவி.தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.