

சென்னையில் செயல்படும் அகில இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் இந்த ஆண்டுக்கான முதன்மை தேர்வுக்காக பயிற்சி பெற 79 மாணவர்கள் தேர்வுப்பெற்றுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி தொடங்கியது.
இதுகுறித்து இப்பயிற்சி மையம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
“தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் கீழ் இயங்கும் அண்ணா மேலாண்மை நிலைய பயிற்சி மையத்தின் பயிற்சி நிறுவனமாகிய அகில இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையம் ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28 இல் இயங்கி வருகிறது.
தமிழக அரசின் முதன்மையான நோக்கமாகிய தமிழக மாணவர்கள் அதிகம் பேர் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சீரிய குறிக்கோளுடன் இயங்கி வருகிறது. இங்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசால் இலவசமாக தங்கும் அறையும் தரமான உணவும் வழங்கப்படுகிறது.
மேலும் மத்திய பணியாளர் தேர்வாணைய பாடத்திட்டத்தின்படி சிறந்த அனுபவம் உள்ள பேராசிரியர்கள் மற்றும் அகில இந்தியக் குடிமைப் பணியில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வு பயிற்சிக்கான ஆன்லைன் வகுப்புகள் அக்.10 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இவ்வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று கூடுதல் தலைமை செயலர் மற்றும் பயிற்சித் துறைத் தலைவர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
குடிமைப் பணிகள் முதன்மை தேர்வு பயிற்சி வகுப்புக்காக 79 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு நவ.11 புதன்கிழமை அன்று கூடுதல் தலைமை செயலர் மற்றும் பயிற்சித் துறைத் தலைவர் இறையன்பு, கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றிப் பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் "இந்தியாவை உருவாக்கும் இளைஞர்கள் நீங்கள், உங்கள் வெற்றி இந்தத் தேசத்தின் வெற்றி" என்றார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் பயிற்சித் துறைத் தலைவர், எஸ். இராஜேந்திரன், முதல்வர் ஆர். இராமன், அகில இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையம், மற்றும் நிகழ்ச்சி மேலாளர், சுந்தரராஜன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.