

2021-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் முதன்மைச் செயலாளர் இன்று (நவ. 12) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"ஹஜ்-2021இல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்களிடமிருந்து, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
சிறப்பு விதிமுறைகள், விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள், தகுதிக்கான அளவுகோல்கள், வயதுக் கட்டுப்பாடுகள், உடல் நலம் மற்றும் உடற்தகுதித் தேவைகள் ஆகியவற்றுடன் ஹஜ் - 2021 சிறப்புச் சூழ்நிலைகளின் கீழ் நடைபெறும்.
மேலும், சவுதி அரேபிய அரசின் பிற தொடர்புடைய நிபந்தனைகள் கரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் அவை பொருத்தமானதாக உணரும்போது அவர்கள் மீது விதிக்கப்படலாம். ஹஜ் 2021-க்கான ஹஜ் விண்ணப்பத்தின் முழு செயல்முறையும் சவுதி அரேபிய அரசின் இறுதி வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டது.
இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் 2021-க்காக விண்ணப்பிக்கும் செயல்முறை 7.11.2020 முதல் ஆன்லைனில் தொடங்கி 10.12.2020 அன்று முடிவடைகிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in என்ற இணையதளம் வழியாகவும் அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள மும்பை இந்திய ஹஜ் குழு செயலியினை ஆன்ட்ராய்டு கைப்பேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யலாம்.
புனிதப் பயணிகள் 10.12.2020 அன்று அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்டு குறைந்தது 10.1.2022 வரையில் செல்லத்தக்க இயந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசிப் பக்கம், வெள்ளைப் பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உறைத் தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பதிவுக் கட்டணம் (நபரொருவருக்கு ரூ.300/-) ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களைத் தாங்களே பூர்த்தி செய்யலாம் அல்லது இணையதளக் கூடம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அல்லது தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் தங்கள் வசதிக்கேற்ப விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யலாம்.
மெஹ்ரம் (ஆண்வழித் துணை) இல்லாமல் பெண்கள் மட்டும் செல்லும் வகையின் கீழ் ஹஜ் 2020-க்குப் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஹஜ் 2021-க்குத் தகுதியுடையதாகக் கருதப்படும்.
ஹஜ் 2021-ன் குறிப்பிடப்பட்ட மாற்றங்கள்/அம்சங்கள் பின்வருமாறு:
* வயது வரம்பு 18 வயதிலிருந்து 65 வயது வரை
* 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
* ஒரு உறையில் அதிகபட்சம் மூன்று நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
* ஹஜ் பயணம் 30-35 நாட்கள்
* ஒரு புனிதப் பயணியின் தங்குமிட இடைவெளி 9 சதுர மீட்டர்
தனிமனித இடைவெளியின் விதிமுறைகள்
- நிலைப்படுத்தப்பட்ட பயணப் பெட்டிகள் இந்திய ஹஜ் குழு மூலம் வழங்கப்படும்.
- கரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, ஹஜ் 2021-க்கான புறப்பாடு தளம் 21-லிருந்து 10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, அகமதாபாத், பெங்களூரு, கொச்சின், டெல்லி, கௌஹாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் ஸ்ரீநகர். புனிதப் பயணிகள் அருகிலுள்ள சிக்கனமான புறப்பாட்டுத் தளத்தைத் தெரிவு செய்வதற்கான விருப்பம்/ தெரிவு எதுவும் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டின் ஹஜ் புனிதப் பயணிகளைப் பொறுத்தவரையில் கொச்சின் புறப்பாட்டுத் தளமாக இருக்கும்.
- கரோனா தொற்றுநோய் காரணமாக அயல்நாட்டில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஹஜ் மேற்கொள்ள எந்த ஏற்பாடும் செய்யப்படமாட்டாது.
- ஹஜ் முன்பணத் தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- ஹஜ் கட்டணங்கள் சுமார் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் முதல் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் வரை அதிகரிக்க நேரிடும்.
ஹஜ் 2021 பற்றிய விவரங்களுக்கு, புனிதப் பயணிகள் ஹஜ் 2021க்கான வழிகாட்டுதல்களைப் படிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் இந்திய ஹஜ் குழுவின் ஹஜ் தகவல் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்: 022-22107070".
இவ்வாறு சிறுபான்மையினர் நலத் துறையின் முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.