

கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வந்திருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மணக்குடி பாலத்துக்கு முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பெயரைச் சூட்டுவதாக அறிவித்தது மீனவர்களின் கவனத்தை அதிமுகவை நோக்கித் திருப்பியுள்ளது.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மீனவர்கள் பரவலாக வசிக்கின்றனர். அதில் மீனவ மக்கள் மிக அடர்த்தியாக இருக்கும் மாவட்டங்களில் ஒன்று கன்னியாகுமரி. இங்கு 2 லட்சத்துக்கும் அதிகமான மீனவர் சமூக வாக்குகள் உள்ளன. சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அலசினால் கிள்ளியூர், குளச்சல், கன்னியாகுமரி தொகுதிகளிலும் கணிசமான அளவு மீனவர் வாக்குகள் உள்ளன. மூன்று தொகுதிகளிலும் வெற்றி- தோல்வியை நிர்ணயிக்கும் இடத்தில் மீனவ மக்கள் இருந்தாலும் இந்த மக்களின் பல கோரிக்கைகள் கவனிக்கப்படாமலேயே கிடக்கின்றன.
பிரதான கட்சிகள் மீனவ சமுதாய மக்களுக்குப் பெரிய அளவில் வாய்ப்புகளை வழங்குவதில்லை. இந்த நிலையில், குமரி மாவட்டத்தின் முதல் பெண் அமைச்சரும் தங்கள் சமுதாயத்துப் பிரதிநிதியுமான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த லூர்தம்மாள் சைமனுக்கு உரிய அங்கீகாரத்தை அரசும் அரசியல் கட்சியினரும் வழங்க வேண்டுமென மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் குமரிக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேலமணக்குடி - கீழ மணக்குடி இணைப்புப் பாலத்துக்கு லூர்தம்மாள் சைமனின் பெயர் வைக்கப்படும் என அறிவித்தார். இதனால் குமரி மாவட்ட மீனவர்கள் மட்டத்தில் அதிமுகவின் இமேஜ் உயர்ந்துள்ளது.
யார் இந்த லூர்தம்மாள்?
காமராஜர் இரண்டாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றபோது அவரோடு சேர்ந்து ஏழு அமைச்சர்கள் பதவியேற்றார்கள். அதில் உள்ளாட்சி, மீன் வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவர் லூர்தம்மாள் சைமன். குமரி மாவட்டம், மணக்குடி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். உள்ளாட்சியிலும், மீன்வளத் துறையிலும் அவரது காலத்தில் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்தார்.
உள்ளாட்சி நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டது, ஜிலேபி ரக மீன்களை அறிமுகப்படுத்தியது, 1958-ல் தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டத்தை உருவாக்கியது என லூர்தம்மாள் சைமனின் சாதனைப் பட்டியல் அதிகம். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லூர்தம்மாளை அவரது மறைவுக்குப் பின் காங்கிரஸ் கட்சியே மறந்துவிட்ட நிலையில், மீனவர்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று , லூர்தம்மாள் பிறந்த ஊரில் கட்டப்பட்ட பாலத்துக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று அதிமுக அரசு அறிவித்துள்ளது.
குமரி மாவட்டத்தில் பெரும்பாலும் தேர்தல் முடிவுகள் மத அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. இந்நிலையில் அண்மையில் மாவட்ட மீனவப் பிரதிநிதிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், ‘மாவட்டத்தில் 2 லட்சம் மீனவர் வாக்குகள் இருந்தும் நமக்குப் பிரதான கட்சிகள் யாரும் போட்டியிட வாய்ப்புத் தருவதில்லை. அதையெல்லாம் மறந்துவிட்டு நாமும் பாஜக ஜெயித்துவிடக் கூடாதென்றே அதற்கு எதிரான கூட்டணிக்கு வாக்களிக்கிறோம். இதனால் அவர்களும் எளிதில் ஜெயித்து விடுகிறார்கள். இந்தத் தேர்தலில் மீனவர்களுக்கு வாய்ப்பளித்தால்தான் அவர்களுக்கும் ஓட்டு’ என்று விவாதித்தனர்.
இந்தத் தகவல்கள் கசிந்து கொஞ்சம் குழம்பிப்போய் இருந்தது திமுக - காங்கிரஸ் அணி. இந்நிலையில், யாருமே எதிர்பார்க்காத நிலையில் லூர்தம்மாள் சைமனின் பெயரைப் பாலத்துக்கு முதல்வர் பழனிசாமி சூட்ட உள்ளதாக அறிவித்ததால் மீனவர்களின் கவனம் அதிமுக பக்கம் நகர்கிறது. லூர்தம்மாள் அஸ்திரம் தேர்தலில் அதிமுகவுக்கு எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்.