Published : 12 Nov 2020 05:27 PM
Last Updated : 12 Nov 2020 05:27 PM

தமிழகம் முழுவதும் உள்ள 502 மகளிர் விடுதிகளில் தரமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதை உறுதி செய்க: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள 502 மகளிர் விடுதிகளில் தரமான கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உபகரணங்கள் பொருத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில் உள்ள 502 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மகளிர் விடுதிகளில் 2,510 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தமிழக அரசு டெண்டர் கோரியது.

எல்காட் நிறுவனம் இருக்கும் நிலையில் அந்த நிறுவனத்தின் மூலமாகத் திட்டத்தைச் செயல்படுத்தாமல், அரசு வெளியிட்ட டெண்டரை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று (நவ. 12) விசாரணைக்கு வந்தது.

டெண்டர் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாத மனுதாரருக்கு இந்த வழக்கைத் தொடர எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்றும், தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர் சட்டப்படி பிற்படுத்தப்பட்ட நலத்துறை இயக்குநர் தலைமையில் குழு அமைத்து நியாயமான டெண்டர் கோரப்பட்டுள்ளதால் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதிகள், டெண்டரை எதிர்த்து வழக்குத் தொடர மனுதாரருக்கு உரிமையில்லை எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

மேலும், நியாயமான, வெளிப்படைத்தன்மையான நடவடிக்கைகளைப் பின்பற்றி மகளிர் விடுதிகளில் தரமான கண்காணிப்பு கேமராக்களும், உபகரணங்களும் பொருத்துவதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x