

தமிழகத்தில் நவ.16-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பதாக அறிவிப்பு வந்த நிலையில் எதிர்ப்பு வந்ததை அடுத்து பெற்றோர் கருத்து கேட்கப்பட்ட நிலையில் பள்ளி கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதை அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 25 -ம் தேதி முதல் ஊரடங்கு அமலானது. இதில் பொதுமக்கள் கூடும் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட முடியாத சூழ்நிலை காரணமாக 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்தது.
அக்.31-ம் தேதி அன்று தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிப்பு குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்பில், “தமிழகத்தில் பள்ளிகள் (9,10,11,12-ம் வகுப்புகள் மட்டும்), அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நவம்பர் 16-ம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன” என்று தெரிவித்திருந்தார்.
பள்ளிகள் திறப்பு குறித்து கடும் விமர்சனம் எழுந்த நிலையில். நவ 9-ம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள 12,000 அரசு, தனியார் பள்ளிகளில், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
அதில் பெரும்பாலான பெற்றோர் பள்ளிகள் திறக்கக்கூடாது என்று தெரிவித்ததாக கூறப்பட்டது. இதையடுத்து நவ.16 -ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட்டது. அரசின் இந்த முடிவுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பதிவு வருமாறு:
தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பை தமிழக அரசு ஒத்திவைத்திருப்பது மிகச்சரியான முடிவு. இம்முடிவை நான் வரவேற்கிறேன். பண்டிகை காலங்களில் கரோனா பரவல் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் இந்த விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை.
கரோனா வைரஸ் நோய் மிகவும் ஆபத்தானது. மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இனிவரும் நாட்களிலும் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்த முடிவு மருத்துவ வல்லுனர்கள் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஓணம் திருநாளின் போது கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படாதது தான் கேரளத்தில் கரோனா அதிகரிக்கக் காரணம். தமிழகத்தில் அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க தீபஒளி காலத்தில் கூடுதல் கட்டுப்பாட்டுடனும் எச்சரிக்கையுடனும் மக்கள் செயல்பட வேண்டும்".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.