

சிறுமிகளைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய வழக்கைத் தாமாக முன்வந்து தேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம் விசாரிக்கத் தொடங்கியது.
அறிக்கையை டெல்லியிலுள்ள ஆணையத் தலைவருக்குச் சமர்ப்பிக்க உள்ளதாக, விசாரணையில் ஈடுபட்ட உறுப்பினர் ஆனந்த் தெரிவித்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி அடுத்த சாத்தமங்கலம் பகுதியில் கன்னியப்பன் என்பவர் வாத்துப் பண்ணை நடத்தி வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் பகுதியைச் சேர்ந்த 6 வயது முதல் 14 வயது உள்ள 5 சிறுமிகள், கடந்த 2 வருடங்களாகக் கொத்தடிமைகள் ஆக்கப்பட்டு, வாத்து மேய்க்கும் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில், 5 சிறுமிகளைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, சித்ரவதை செய்து இருப்பதாக குழந்தைகள் நல மையம் குழு, மங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தது. இதையடுத்து, சிறுமிகளைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், அவரது மகன் ராஜ்குமார், உறவினர்கள் பசுபதி, சிவா, அய்யனார், மூர்த்தி ஆகிய ஆறு பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கன்னியப்பனின் மற்றொரு மகன் சரத்குமார் (22) மற்றும் 15 வயதுச் சிறுவன் உள்பட 2 பேரை மங்கலம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் இன்று (நவ. 12) புதுச்சேரி வந்தார். அவர் மங்கலம் காவல் நிலையத்தில் முதலில் விசாரணை நடத்தினார்.
விசாரணையில், வில்லியனூர் சப்-கலெக்டர் அஸ்வின் சந்துரு, எஸ்.எஸ்.பி பிரதிக்ஷா, குழந்தைகள் மேம்பாட்டுக் கழக இயக்குநர் அசோகன், புதுச்சேரி குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன், தாசில்தார் அருண், எஸ்.பி. ரங்கநாதன் ஆகியோரும் பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து, ஆனந்த் கூறுகையில், "புதுச்சேரியில் ஐந்து சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இவ்வழக்கில் இதுவரை 8 பேர் கைதாகியுள்ளனர்.
இது தேசிய அளவில் முக்கியத்துவம் மிக்க வழக்காகும். இக்குழந்தைகளுக்குப் பெற்றோர் இல்லை. குழந்தைகளுக்குப் போதிய பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. குழந்தைகளை மனதளவில் காக்கும் சிகிச்சையும், அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. குற்றம் மீண்டும் நிகழாவகையில் ஆலோசித்துள்ளோம்.
விசாரணை அறிக்கையை டெல்லியில் உள்ள ஆணையத் தலைவரிடம் சமர்ப்பிக்க உள்ளேன். இது மூன்று வகையாக இருக்கும். காவல்துறையினர் சரியான முறையில் விசாரணை நடத்துகின்றனர். மேலும், சிலருக்குத் தொடர்பு உள்ளது. அவர்களும் விரைவில் கைதாவார்கள்" என்று தெரிவித்தார்.