Published : 12 Nov 2020 02:25 PM
Last Updated : 12 Nov 2020 02:25 PM

99 வயது சுதந்திரப் போராட்ட வீரரின் மனு குறித்து என்ன முடிவு?- தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

99 வயது சுதந்திரப் போராட்ட வீரரின் தியாகி பென்ஷன் கோரிக்கையில் என்ன முடிவு எடுத்தீர்கள் என்பதை நவம்பர் 26-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 99 வயது சுதந்திரப் போராட்ட வீரர் கஃபூர், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர். 1997-ம் ஆண்டு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தனக்குத் தியாகிகள் பென்ஷன் வழங்கக் கோரி கஃபூர் விண்ணப்பித்திருந்தார்.

23 ஆண்டுகளாகத் தனது விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பென்ஷன் வழங்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி கஃபூர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், தியாகிகள் பென்ஷன் கோரி 99 வயது முதியவரை நீதிமன்றத்தை நாடச் செய்த செயலற்ற தன்மைக்காக, அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் எனக் கண்டனம் தெரிவித்து, மத்திய - மாநில அரசுகள் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

''மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலிக்காததற்கு அரசை மட்டும் குறை கூற முடியாது. பென்ஷன் கோரி மனுதாரர் அளித்த விண்ணப்பத்தில், பிறந்த தேதியிலும், அவர் சிறையில் இருந்தபோது அவருடன் சிறையில் இருந்த சக கைதிகளின் சான்றுகளிலும் குறைபாடுகள் இருந்தன. இதனால் அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை” எனத் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது சம்பந்தமான ஆவணங்களைப் பரிசீலித்த நீதிபதி, வயதுச் சான்றாக மனுதாரர் ஆதார் அட்டையைச் சமர்ப்பித்துள்ளதாகவும், சக கைதி கண்ணன் என்பவர் அளித்த சான்றில் தட்டச்சுக் குறைபாடு மட்டுமே உள்ளதால் இந்த ஆவணங்களின் அடிப்படையில், மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து, பென்ஷன் வழங்குவது குறித்து முடிவெடுத்து நவம்பர் 26-ம் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x