டெல்லியில் ஜெயலலிதாவின் பெயரில் தமிழ் மாணவர்களுக்காக புதிய பள்ளிக்கூடம்; முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

பள்ளிக் கட்டிடத்தைத் திறந்து வைக்கும் முதல்வர் பழனிசாமி.
பள்ளிக் கட்டிடத்தைத் திறந்து வைக்கும் முதல்வர் பழனிசாமி.
Updated on
1 min read

டெல்லியில் உள்ள மயூர் விகார் பள்ளி வளாகத்தில் ஜெயலலிதாவின் பெயரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடத்தை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (நவ. 12) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தலைநகர் டெல்லியில் கடந்த 90 ஆண்டுகளாக டெல்லித் தமிழ்க் கல்விக் கழகத்தால் ஏழு இடங்களில் மொழிவாரி சிறுபான்மையின மேல்நிலைப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப் பாடமாகவும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் விருப்பப் பாடமாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது.

இப்பள்ளிகளில் பயிலும் சுமார் 7,500 மாணவர்களில் 85 சதவீதம் தமிழர்கள் ஆவர். இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் தமிழ்ப் பாடப் புத்தகங்களை விலையில்லாமல் வழங்கி வருகிறது.

டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 15 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். பெருகிவரும் தமிழ் மக்களின் எண்ணிக்கையினைக் கருத்தில் கொண்டு, டெல்லி வளர்ச்சிக் குழுமத்தால், டெல்லித் தமிழ்க் கல்விக் கழகத்திற்கு மயூர் விகாரில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மயூர் விகாரில் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு நிதியுதவி வேண்டி, தமிழ்நாடு முதல்வரிடம் டெல்லித் தமிழ்க் கல்விக் கழகம் கோரிக்கை வைத்தது. அக்கோரிக்கையினை கனிவுடன் ஏற்று, டெல்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பில் டெல்லியில் உள்ள மயூர் விகாரில் கட்டப்படவுள்ள பள்ளிக் கட்டிடத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதல்வர் ஆணையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 26.10.2018 அன்று ஜெயலலிதாவின் பெயரில் கட்டப்படவுள்ள பள்ளிக் கட்டிடத்திற்கு தமிழ்நாடு முதல்வர் காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

டெல்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பில் டெல்லியில் உள்ள மயூர் விகார் பள்ளி வளாகத்தில் ஜெயலலிதாவின் பெயரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடத்தை தமிழ்நாடு முதல்வர் இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இப்புதிய பள்ளிக் கட்டிடம் 6,515 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in