Published : 12 Nov 2020 01:38 PM
Last Updated : 12 Nov 2020 01:38 PM

ரூ.25 கோடி மதிப்பீட்டில் உயிர்காக்கும் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

உயிர்காக்கும் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்ட 108 எண்ணிக்கையிலான புதிய அவசரகால ஊர்திகளை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“சுகாதாரத்துறை சார்பில் ‘108’ அவசரகால ஊர்தி சேவைக்காக, 24 கோடியே 77 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், உயிர்காக்கும் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்ட 108 எண்ணிக்கையிலான புதிய அவசரகால ஊர்திகளின் சேவைகளைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக, தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி 9 ஊர்திகளை இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு, விபத்துகளைக் குறைக்கவும், உயிர் இழப்புகள் ஏற்படாமல் தவிர்க்கவும், 108 அவசரகால ஊர்தி சேவையை வலுப்படுத்துதல், விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துதல், தலைக்காயப் பிரிவுகளை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ‘108’ அவசரகால ஊர்தி சேவை திட்டத்தில் தற்போது 1,180 அவசரகால வாகனங்கள் இயங்கி வருகின்றன.

108 அவசரகால ஊர்தி சேவைகள் மூலமாக இதுவரை 25 லட்சத்து 34 ஆயிரம் கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட சுமார் 1 கோடியே 2 லட்சத்திற்கும் மேலான பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.

கடந்த மார்ச் 24 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களுக்கு அவசர காலங்களில் உயிர் காப்பதில் சிறப்பாகச் சேவையாற்றி வரும் 108 அவசரகால ஊர்தி சேவையை மேலும் வலுப்படுத்துவதற்காக, நடப்பாண்டில் 500 புதிய அவசரகால ஊர்திகள் 125 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதனைச் செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ், 108 அவசரகால ஊர்தி சேவைக்காக 500 ஊர்திகள் வாங்க 103 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக 20 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், உயிர்காக்கும் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்ட 90 புதிய அவசரகால ஊர்திகள் கடந்த ஆகஸ்டு 31 முதல்வர் பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டன.

தற்போது, இரண்டாம் கட்டமாக 24 கோடியே 77 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்ட 108 எண்ணிக்கையிலான புதிய அவசரகால ஊர்திகளின் சேவைகளை முதல்வர் பழனிசாமி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், செல்லூ ராஜு, செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, சரோஜா, தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் உமாநாத், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் சிவஞானம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x