

13 ஆயிரம் ஆணிகளைக் கொண்டு ஸ்டிரிங் ஆர்ட்டில் நடிகர் கமல்ஹாசன் ஓவியத்தை கோவை இளைஞர் உருவாக்கியுள்ளார்.
கோவை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சீவகவழுதி (32). மாஸ் கம்யூனிகேஷன் பட்டதாரியான இவர் ஓவியத்தின் மீது கொண்ட தீராத காதலால், தொடர்ந்து பல வகையான ஓவியங்களை விதவிதமாகப் படைத்து வருகிறார்.
ஓவியக் கலையில் புதிய பரிமாணமான ஸ்டிரிங் ஆர்ட் உருவாக்குவதையும் கற்றுக்கொண்டு, அதில் சிறந்து விளங்குகிறார். நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகனான இவர், ஸ்டிரிங் ஆர்ட்டில் அவரது ஓவியத்தை உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து இந்து தமிழ் இணையதளத்திடம் சீவகவழுதி கூறும்போது, ''நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகாலக் கலைப் பயணத்தையொட்டி, இந்த ஓவியத்தை உருவாக்கத் திட்டமிட்டேன். இது குழந்தைக்குச் சோறு ஊட்டுவதைப் போல சிரமமானது. பல்வேறு இடர்களுக்கு இடையே கொஞ்சம் கொஞ்சமாக ஓவியத்தை உருவாக்கினேன். இடையில் சற்று உடல் சோர்வும் ஏற்பட்டது.
இந்தப் படைப்பை உருவாக்கும் முயற்சியில் இருந்த ஒவ்வொரு நாளின் இரவுகளும் என்னை ரசிக்க வைத்தன. 28 நாட்கள் உழைப்பில், 250 மணி நேரத்தில், 13 ஆயிரம் ஆணிகளைக் கொண்டு 32 சதுர அடி பரப்பளவில் நடிகர் கமல்ஹாசனின் உருவத்தை உருவாக்கியுள்ளேன்'' என்றார்.