Published : 12 Nov 2020 01:33 PM
Last Updated : 12 Nov 2020 01:33 PM

இருசக்கர வாகனத்தில் வந்து குறைகளைக் கேட்ட திருப்பூர் எம்.பி.- மலைக் கிராம மக்கள் நெகிழ்ச்சி  

திருப்பூர்

பர்கூர் மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களின் குறைகளை இருசக்கர வாகனத்தில் சென்று கேட்டறிந்தார் திருப்பூர் தொகுதியின் இந்தியக் கம்யூனிஸ்ட் எம்.பி.யான கே.சுப்பராயன்.

ஈரோடு மாவட்டம் பர்கூர் அருகே தம்புரெட்டியிலிருந்து அந்தியூர் வட்டக்காட்டிற்கு விவசாயக் கூலி வேலைக்குச் சென்ற வாகனம் மணியாச்சி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 11 பேர் அந்தியூர், ஈரோடு, சேலம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்த எம்.பி. சுப்பராயன், உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களைச் சந்தித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து பர்கூர் மலைக் கிராமங்களில் நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார். அந்தியூர் வட்டாரம் பர்கூர் ஊராட்சி தம்புரெட்டி பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள், தங்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்த தினக்கூலி ரூ.256 முழுமையாக வழங்கப்படுவதில்லை என்று அவரிடம் முறையிட்டனர்.

மேலும், பணியாளர்களின் கூலியைப் பணித்தளத்திலேயே வழங்குவதில்லை. கூலி எவ்வளவு என்பதும் தெரிவதில்லை. அலுவலர்களிடம் கேட்டாலும் பதில் கிடைப்பதில்லை. உரிய ரசீதுகள் வழங்கப்படுவதில்லை. வேலை அட்டையில் ஊதிய விவரங்களை எழுதுவதில்லை எனவும் தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த சுப்பராயன், உயர்மட்ட அலுவலர்களுடன் பேசி, தகுந்த நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

வாகனம் செல்ல முடியாத தம்புரெட்டி கிராமப்பகுதியில் தம் கட்சித் தோழர்களுடன் இருசக்கர வாகனத்தில் சுப்பராயன் பயணித்தது குறித்து அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டனர். அவருடன் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் வி.பி. குணசேகரன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் டி.ஏ. மாதேஸ்வரன், பி.வி.பாலதண்டாயுதம், பி.ஜெ.கணேசன் ஆகியோர் உடன் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x