Last Updated : 12 Nov, 2020 01:12 PM

 

Published : 12 Nov 2020 01:12 PM
Last Updated : 12 Nov 2020 01:12 PM

கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டித் திட்டம் புதுச்சேரியில் தொடக்கம்; மேடையேற மறுத்த திமுக மாநில அமைப்பாளர்கள்

கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டித் திட்டம் புதுச்சேரியில் இன்று தொடங்கப்பட்டது. திமுகவினர் வருகைக்காக அரை மணி நேரம் முதல்வர் நாராயணசாமி காத்திருந்தார். இவ்விழாவுக்கு வந்த புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர்கள் விழா மேடையில் ஏற மறுத்துவிட்டனர். அமைச்சர்கள் சமாதானத்தையும் அவர்கள் ஏற்கவில்லை. பொதுவெளியில் முதல் முறையாக திமுக-காங்கிரஸ் மோதல் வெடித்தது.

புதுவையில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ராஜீவ்காந்தி பெயரில் ரொட்டி பால் திட்டமும், மதிய உணவு திட்டமும் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயரில் புதிதாக காலை சிற்றுண்டித் திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் புதுவை, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இட்லி, பொங்கல், கிச்சடி, சாம்பார், சட்னி ஆகியவையும், மாஹே பிராந்திய மாணவர்களுக்கு உடைத்த கோதுமை உப்புமா - சட்னி, உப்புமா - கடலை, புட்டுக் கடலையும், ஏனாம் பிராந்திய மாணவர்களுக்கு உப்புமா - சட்னி, தக்காளி சாதம் - சட்னி, கிச்சடி - சட்னி, உடைத்த கோதுமை உப்புமா- சட்னியும் வழங்கப்பட உள்ளது.

இந்தத் திட்டம் அனைத்துப் பள்ளி வேலைநாட்களிலும் மழலையர் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்தைச் செம்மைப்படுத்த ரூ.6 கோடி கூடுதலாக செலவு செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 81 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர்.

இந்தப் புதிய திட்டத்தின் தொடக்க விழா ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று (நவ.12) நடைபெற்றது. விழா காலை 9 மணிக்குத் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. குழந்தைகள் முன்னதாக வரவழைக்கப்பட்டு அமர வைக்கப்பட்டிருந்தனர். முதல்வர் நாராயணசாமி, கல்வியமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் காலையில் அங்கு வந்து திமுகவினருக்காகக் காத்திருந்தனர்.

காலை 9.30 மணிக்கு திமுக அமைப்புச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர்கள் சிவா எம்எல்ஏ (தெற்கு), சிவக்குமார் (வடக்கு), நாஜிம் (காரைக்கால்) ஆகியோருடன் வந்தார்.

டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி காலை சிற்றுண்டித் திட்டத்தை ஆர்.எஸ்.பாரதி தொடங்கி வைத்தார். புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர்கள் மேடைக்குச் செல்ல மறுத்துவிட்டு கீழே பார்வையாளர்களுடன் அமர்ந்தனர். அவர்களை முதல்வர், அமைச்சர்கள் அழைத்தும் மேடைக்குச் செல்லவில்லை.

சிற்றுண்டித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் நாராயணசாமி | படம்: எம் சாம்ராஜ்

அதைத் தொடர்ந்து, விழாவுக்குத் தலைமை வகித்து முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "முழுமையாக பள்ளி இயங்கும்போது அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி எனக் கூறியவர் கருணாநிதி. இதனைத் தற்போது நாம் உணரத் தொடங்கியுள்ளோம்.

மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், புதுச்சேரி ஆகிய இடங்களில் ஆளுநர் துணையுடன் ஆட்சி நடத்த நினைக்கின்றனர். இதற்கு அரசியலமைப்புச் சட்டம் ஒருபோதும் இடம் தராது. கூட்டாட்சித் தத்துவத்தை மதிப்பவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும். மாநிலத்தில் சுயாட்சி இருந்தால்தான் மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், "நாங்கள் உறவுக்குக் கைகொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம். மாணவர்களைக் காக்க வைக்கக்கூடாது எனக் காலை 8 மணிக்கே புதுச்சேரி வந்துவிட்டேன். அரசு சார்பில் அரை மணி நேரம் தாமதமாக வாருங்கள் எனக் கூறியதால் காலதாமதமாக வந்தேன்.

நான் மாணவர்களைக் காக்க வைக்கவில்லை. திமுகவைப் பொறுத்தவரை வலிய சண்டைக்குப் போகமாட்டோம், வந்த சண்டையை விடமாட்டோம். இந்த நிலை இப்போதும் தொடரும். தமிழகத்தில் ஏதேதோ நடந்து வருகிறது. அங்கு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்" என்று தெரிவித்தார்.

இறுதியில் விழா நிறைவடைந்து காலை 10 மணிக்கு மேல்தான் குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x