Last Updated : 27 Oct, 2015 07:35 AM

 

Published : 27 Oct 2015 07:35 AM
Last Updated : 27 Oct 2015 07:35 AM

ஜாதி அரசியலுக்கு மாநில கட்சிகளே காரணம்: பாஜக பொதுச் செயலாளர் முரளிதர ராவ் குற்றச்சாட்டு

அரசியலில் ஜாதி ஆதிக்கம் அதிகரித்ததற்கு மாநில கட்சிகளே காரணம் என்று பாஜக தேசியப் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் தமிழக பொறுப்பாளருமான பி.முரளிதர ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

மருதுபாண்டியர் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக காளை யார்கோவில் செல்லும் வழியில் நேற்று சென்னை வந்த அவர் ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

தேசிய கட்சியின் தலைவரான நீங்கள், மருதுபாண்டியர் குருபூஜை விழாவில் பங்கேற்பது தேவர் சமூக வாக்குகளை குறிவைத்தா?

சுதந்திரப் போராட்ட வீரர் என் பதற்காகவே மருதுபாண்டியருக்கு மரியாதை செலுத்த செல்கிறேன். பாஜக குறிப்பிட்ட ஜாதி, மதத்துக்கு சொந்தமான கட்சியல்ல. சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே தேவர் சமூகம் தேசிய கட்சிகளை ஆதரித்து வந்துள்ளது. நாட்டுக்காக தியாகம் செய்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம்.

தேர்தல் வெற்றிக்காக ஜாதி அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகள் ஜாதியை மையப்படுத்தியே அரசியல் செய்துவருகின்றன. அரசியலில் ஜாதியின் ஆதிக்கம் இருப்பதற்கு இதுபோன்ற மாநில கட்சிகளே காரணம். தேசிய கட்சியான பாஜக, ஜாதிகளுக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்தவே முயற்சிக்கிறது.

பாஜக, தலித்களுக்கு எதிரான கட்சி என்ற குற்றச்சாட்டும் இருக் கிறதே?

நகர மக்களுக்கான கட்சி, பணக் கார்களுக்கான கட்சி, உயர்ஜாதிகள் கட்சி, இந்துக்களுக்கான கட்சி, பெண்களுக்கு எதிரான கட்சி என்றெல்லாம் பிரச்சாரம் செய்து தோற்றுப்போனவர்கள் தலித் களுக்கு எதிரான கட்சி என்ற பிரச்சாரத்தை தற்போது தீவிரப் படுத்தியுள்ளனர். தலித்களின் பெருவாரியான ஆதரவுடன்தான் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜகவில்தான் தலித் எம்.பி., எம்எல்ஏக்கள் அதிகம் உள்ளனர். தலித்கள் இல்லாமல் பாஜக இல்லை.

தலித்களுக்கு எதிராக பேசிய மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்கை பிரதமர் மோடி கண்டிக்கவில்லையே?

அது முடிந்துபோன விவகாரம். தனது பேச்சுக்கு வி.கே.சிங் விளக்கம் அளித்துவிட்டார். மாநிலங் களில் நடக்கும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளுக்கு எல்லாம் பிரதமர் பதிலளிக்கத் தேவையில்லை. ‘நல் லாட்சி’ என்ற முழக்கத்தை வைத்தே மோடி ஆட்சிக்கு வந்தார். எனவே, அதை நோக்கி அவர் ஒவ்வொரு நொடியும் முன்னேறி வருகிறார். ஆனால், நாட்டில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பதிலளிக்குமாறு நிர்பந்தப்படுத்தி அவரை முடக்கப் பார்க்கின்றனர். அரசியல் எதிரிகளின் இந்த சூழ்ச்சிகளுக்கு மோடி இரையாக மாட்டார்.

இடஒதுக்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியிருக்கிறார். இதன்மூலம் இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாஜக முடிவு செய்துவிட்டதா?

தற்போதைய இடஒதுக்கீட்டு முறை தொடர வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு. அதேநேரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் அரசு உதவ வேண்டும். பொருளாதார ரிதீயாக பின்தங்கியவர்களின் முன்னேற்றம் பற்றி பேசினால் இடஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சி என பிரச்சாரம் செய்கின்றனர். இது தவறானது.

தேமுதிகவும், பாமகவும் பாஜக கூட்டணியில் இருப்பது போலவே தெரியவில்லையே?

கூட்டணியில் இல்லை என தேமுதிகவோ, பாமகவோ அறிவிக்கவில்லையே.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள பாஜக என்ன திட்டம் வைத்துள்ளது?

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதியிலும் போட்டியிடும். இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. கூட்டணி விவரங்கள், முதல்வர் வேட்பாளர் ஆகியவை குறித்து தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு முடிவு செய்வோம். பிஹார் தேர்தல் முடிந்ததும் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளனர்.

இவ்வாறு முரளிதர ராவ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x