

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
அமமுக துணை பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கெனவே துணை பொதுச் செயலாளர்களாக செயல்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ எம்.ரெங்கசாமி ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவார்.
அமமுக பொருளாளராக முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன், தலைமை நிலையச் செயலாளராக முன்னாள் அமைச்சர் சி.சண்முகவேலு நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏ என்.ஜி.பார்த்திபன், ஏற்கெனவே தேர்தல் பிரிவு செயலாளராக பணியாற்றி வரும் எஸ்விஎஸ்பி மாணிக்கராஜவுடன் இணைந்து பணியாற்றுவார்.
தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பில் இருந்த ஆர்.மனோகரன், தேர்தல் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்த ஜி.செந்தமிழன், அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்த சி.சண்முகவேலு அந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக பொருளாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ பி.வெற்றிவேல் கரோனாவால் அண்மையில் உயிரிழந்தார். அவர் வகித்து வந்த பொருளாளர் பொறுப்பு இப்போது திருச்சி ஆர்.மனோகரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.