

விருத்தாசலம் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை அதிகாரி மாற்றப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரியப் பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோயில் அருகே கடந்த 30-ம் தேதி இளம்பெண் ஒருவர் சாலையில் செல்லும்போது செயின் பறிப்பு நடந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் நெய்வேலி அருகேயுள்ள வடக்குத்து சக்தி நகரைச் சேர்ந்த செல்வமுருகன் (39) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு பவுன் சங்கிலி, இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். செல்வமுருகனை விருத்தாசலம் கிளை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கடந்த 4-ம் தேதிநள்ளிரவு விருத்தாசலம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வமுருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்கெனவே சாத்தான்குளம் விவகாரத்தில் போலீஸ் தாக்கியதால் சிறையில் இருந்த தந்தை, மகன் உயிரிழந்த நிலையில் இந்த விவகாரமும் பெரிதானது.
இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி கடலூர் ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் செல்வ முருகனின் மனைவி பிரேமாமனு அளித்தார். அவர் தன் கணவனின் உடலை பெற்றுக் கொள்ள மறுத்து உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். செல்வமுருகன் உடல், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விருத்தாசலம் கிளைச் சிறையில் உயிரிழந்த செல்வமுருகனின் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்ட சிபிசிஐடிஆய்வாளர் தீபா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக தீபா தலைமையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அதற்கும் எதிர்ப்பு கிளம்பியது.
நெய்வேலி காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், ஒரு ஆய்வாளரைக் கொண்டு மற்றொரு ஆய்வாளரை விசாரிப்பதால் முழுமையான தகவல்கள் கிடைக்காது; ஆய்வாளரை உயர்அதிகாரியை வைத்துதான் விசாரணையைத் மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஆய்வாளர் தீபா மாற்றப்பட்டு சென்னையை சேர்ந்த சிபிசிஐடி டிஎஸ்பிகுணவர்மன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
டிஎஸ்பி குணவர்மன் தலைமையில் போலீஸார் நேற்று விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் விசாரணையைத் தொடங்கினர். மருத்துவர்கள், செவிலியர்கள், பிண அறையில் இருந்த ஊழியர்கள், விருத்தாசலம் கிளை சிறை யின்காவலர்கள், கைதிகளிடம் விசாரணை நடத்தி நடத்தினர். நெய்வேலி நகரிய காவல் நிலைய போலீஸாரிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே நேற்று விருத்தாசலம் நீதிமன்றத்தில் செல்வமுருகனின் மனைவி பிரேமா மற்றும் அவரது உறவினர்கள் 5 பேரிடம் குற்றவியல் நடுவர் ஆனந்த் விசாரணை நடத்தினார்.