Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM

பொருளாதார சரிவிலிருந்து மீண்டு வரும் பட்டு நெசவுத் தொழில்; ரூ.40.75 கோடிக்கு விற்பனை; அரசு தள்ளுபடி கிடைக்குமா?

பட்டு நெசவு செய்யும் தொழிலாளி.

காஞ்சிபுரம்

பட்டுக்கு புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் பட்டு வியாபாரம் தற்போது மீண்டும் மீளத் தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் ரூ.40.75 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. விற்பனை அதிகரித்தாலும் முழுமையாக மீள்வதற்கு கூட்டுறவு உற்பத்தி பட்டுச் சேலைகளுக்கு அரசு தள்ளுபடி வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

காஞ்சிபுரத்தில் பட்டு உற்பத்திக்காக 23 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.இச்சங்கங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பணியாற்றிவருகின்றனர். தனியார் நெசவு உரிமையாளர்கள் 200 பேரிடம் 1000-க்கும்மேற்பட்ட தறிகள் உள்ளன. இவர்களிடமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கால் பட்டுச் சேலை உற்பத்தி நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் பலர் வேலை இழப்பை சந்தித்தனர். மாதந்தோறும் சுமார் ரூ.60 கோடிக்கு விற்பனை நடைபெறும் பட்டுத் தொழில் ஏப்ரல், மே மாதங்களில் முற்றிலும் முடங்கியது. அதன் பின்னர்கடைகள் திறக்கப்பட்டும் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறாததாலும், சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததாலும் பட்டுச் சேலைகள் தேக்கம் அடைந்தன.

வழக்கமாக விற்பனையாகும் சேலைகளில் சுமார் 30 சதவீதம் அளவுக்கே விற்பனை நடைபெற்றது. இதனால், உற்பத்தி குறைக்கப்பட்டு பலர் வேலை இழப்பால் அவதியுற்று வந்தனர்.

கோயில் திறப்புக்கு பின்..

காஞ்சிபுரம் கோயில் நகரமாக இருப்பதால் கோயிலுக்காக வரும் சுற்றுலா பயணிகள் அதிகம். தினந்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இவர்கள் மூலம் நடைபெறும் பட்டுச் சேலை விற்பனை முக்கியமானது. தற்போது கோயில்கள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும்பாலான இடங்களில் விற்பனை மேம்பட்டுள்ளது. இதனால் பட்டுச் சேலை விற்பனை 70 சதவீதமாக உயர்ந்தது. கடந்த மாதத்தில் தனியார் மூலம் ரூ.30 கோடி, கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.10.75 கோடி என மொத்தம் ரூ.40.75 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து தனியார் கைத்தறி பட்டு உற்பத்தியாளர் சங்கத்தின் செயலர் வி.கே.தாமோதரன் கூறும்போது, "கரோனா பாதிப்பால் பட்டுச் சேலை உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டது. தற்போது கோயில்கள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து விற்பனை 30 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இருப்பினும் ஏற்கெனவே ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து பலர் மீளாமல் உள்ளனர். அவர்களுக்கு மானியத்துடன் கடன்உதவிகளை அரசு அளிக்க வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து வரும்சுற்றுலாப் பயணிகள் மூலம் அதிக பட்டு விற்பனை நடைபெறும்.அவர்களுக்கான இ-பாஸ் முறையைஅரசு ரத்து செய்ய வேண்டும். கோயில்கள் திறக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளை தாங்கள் விரும்பும் கடைகளில் சேலை வாங்க அனுமதிக்காமல் வற்புறுத்தி அழைத்துச் செல்லும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல்

காஞ்சிபுரம் கைத்தறித் துறை இணை இயக்குநர் அலுவலக வட்டாரங்கள் கூறும்போது, "பட்டுகூட்டுறவு சங்கங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. வழக்கமாக மாதம் ரூ.6 முதல் 7 கோடி மட்டுமே விற்பனை நடைபெறும். கடந்த மாதம் 10.75 கோடிக்கு பட்டுச்சேலைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவு சங்கங்களும் இதிலிருந்து மீண்டு வருகின்றன" என்றன.

கே.எஸ்.பி. கைத்தறி நெசவாளர்சங்கத்தின் தலைவர் ஜெ.கமலநாதன் கூறும்போது, " தீபாவளி என்பதால் கூட்டுறவுச் சங்கங்கள் விற்பனை தற்போது அதிகரித்திருக்கலாம். சில பட்டு கூட்டுறவுச் சங்கங்களைத் தவிர மற்றவை இன்னும் மீளவில்லை. முழுமையாக இதில் இருந்து மீள வேண்டும் என்றால், அரசு கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுச் சேலைகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்க வேண்டும். தேங்கியுள்ள பட்டுச் சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். அப்போதுதான் கூட்டுறவுச் சங்கங்களும் நெசவாளர்களும் முழுமையாக மீள முடியும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x