

கடந்த காலங்களில் உருவான 3-வது அணி, 4-வது அணியை போல், மக்கள் நலன் காக்கும் கூட்டியக்க கூட்டணியும் வெற்றி பெறாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
மகிளா காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷேக் ஹசீனா, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:
கூடங்குளம் அணு உலையிலிருந்து 500 மெகா வாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு தர வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கூடங்குளம் அணு உலையை திறப்பதற்கு அரசு 2011-ல் முழு ஒத்துழைப்பு அளித்திருந்தால், இந்நேரம் 4 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும். தமிழகத்துக்கு 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் கிடைத்திருக்கும். அப்படி செய்யாததால், பல கிராமங்களில் இன்று மின்சாரம் இல்லை.
இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் எம்எல்ஏ ஒருவர் மாட்டுக்கறி விருந்து கொடுத்ததற்காக அவரை பாஜக எம்எல்ஏக்கள் அடித்து உதைத்துள்ளனர். மக்களின் அடிப்படை உரிமைகளில் பாஜக கை வைத்துள்ளது.
தமிழகத்தில் விரைவில் நடக்கவுள்ள காங்கிரஸ் மாநாட்டில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளனர். 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராகவுள்ள நாங்கள், 64 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு முகவர்களை நியமிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த காலங்களில் உருவான 3-வது, 4-வது அணிகளை போல, மக்கள் நலன் காக்கும் கூட்டணியும் வெற்றி பெறாது. எங்கள் கூட்டணி பற்றி கட்சி மேலிடம் சரியான நேரத்தில் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.