

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், தினசரி 100 மில்லியன் லிட்டர் குடிநீர் கூடுதலாக விநியோகிப்பது குறித்து சென்னை குடிநீர் வாரியம் பரிசீலித்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் கடந்த ஆண்டு 3,085 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. தற்போது (நேற்றைய நிலவரப்படி) 6,340 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. வீராணம் ஏரியிலும் போதிய அளவு நீர் உள்ளது.
இந்நிலையில், கரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்களில் பெரும்பாலோர் சென்னை திரும்பிவிட்டனர். அதனால், சென்னைக்கு கூடுதலாக குடிநீர் விநியோகிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், "சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு கூடுதலாக குடிநீர் விநியோகிப்பது குறித்து குடிநீர் வாரியம் பரிசீலிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.
இதுகுறித்து குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது: உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னைக்கு தினசரி 50 மில்லியன் லிட்டர் கூடுதலாக குடிநீர் வழங்கப்பட்டது. தற்போதுசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினமும் 700 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
வீராணம் ஏரியில் இருந்து 180, கடல்நீரைக் குடிநீராக்கும் 2 நிலையங்களில் இருந்து 140, குடிநீர் ஏரிகளில் இருந்து 370, ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து 10 என மொத்தம் 700 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. மேலும் கூடுதலாக100 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
ஆந்திர அணைகளில் குறிப்பாக கண்டலேறு அணையில் கணிசமான அளவு நீர் இருப்பு இருப்பதால், இந்த ஆண்டு கிருஷ்ணா நீரில் நமக்கு உரிய பங்கு முழுமையாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போது பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 400 கனஅடி கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது.
வடகிழக்கு பருவமழையாலும் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும். இதனால் குடிநீர் ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளது. அவ்வாறு நிரம்பினால் உடனடியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு தினசரி வழங்கப்படும் 700 மில்லியன் கனஅடி குடிநீர், 800 மில்லியன் கனஅடியாக உயர்த்தப்படும் என்றனர்.