தமிழகத்தில் நீளும் பாஜகவின் கூட்டணி வலைவீச்சு முயற்சி

தமிழகத்தில் நீளும் பாஜகவின் கூட்டணி வலைவீச்சு முயற்சி
Updated on
2 min read

தமிழத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், அதிமுகவிடம் இருந்து கூட்டணிக்கான அழைப்பை எதிர்நோக்கிக் காத்திருக்குறது பாஜக.

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி பல தொகுதிகளைக் கைப்பற்றி வலுவான இடத்தை பிடித்து திமுகவை இரண்டாம் நிலைக்குத் தள்ளினாலும், அந்த வலுவான நிலையை அக்கட்சியால் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

தற்போதைய அரசியல் சூழலில் பாஜக தனித்து நிற்கிறது என்றே சொல்ல வேண்டும். பாஜகவின் நிலை நிச்சயமற்றதாக இருக்கிறது.

ஒருபுறம் தேமுதிக, பாமக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்த முயற்சி நடைபெறுகிறது.

அதேவேளையில் கட்சியின் ஒரு சில நிர்வாகிகள் அதிமுகவிடம் இருந்து கூட்டணிக்கான அழைப்பு வரும் என்று உறுதிபட நம்புகிறார்கள். பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறு மிக மிகக் குறைவு எனக் கூறும் அரசியல் நோக்கர்கள் இருந்தாலும், அத்தகைய வாய்ப்பு அமைவதை முற்றிலுமாக தவிர்த்துவிட முடியாது என்கின்றனர்.

தமிழகத்தில் பாஜகவின் சரிவு அதிவிரைவாக நடந்த்திருக்கிறது. மக்களவைத் தேர்தல் முடிந்து மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து மிகக் குறுகிய காலத்திலேயே மதிமுக கூட்டணியில் இருந்து விலகியது. மத்திய அரசு தமிழர் விரோத போக்கை கடைபிடிப்பதால் விலகுவதாகக் கூறியது. தேமுதிகவும், பாமகவும் பாஜகவுடன் பெரிதாக இணக்கம் காட்டாமல் இருக்கின்றன.

இந்நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக நிலை குறித்து ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிஸம் பேராசிரியர் சம்பத் குமார் கூறும்போது, "பாஜக வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிதாக சோபிக்க வாய்ப்பில்லை. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 2.2% என்ற சொற்ப அளவிலான வாக்குகளையே பாஜக பெற்றது. அதற்கு முந்தைய 2006 சட்டப் பேரவைத் தேர்தலிலும் அதே நிலைதான். எனவே, வரவிருக்கும் தேர்தலிலும் கட்சிக்கு பெரிய வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

பாஜகவுடனான கூட்டணி எந்த வகையிலும் பலமாக இருக்காது என்பதே பாமக, தேமுதிக கட்சிகளின் கணிப்பாக இருக்கிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோரில் யாரேனும் ஒருவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக்கூட பாஜக முன்வரலாம். ஆனாலும்கூட இது பெரியளவிளான தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது" என்றார்.

'அதிமுக ஏன் ஏற்காது?'

பாஜகவுடன் அதிமுக தேர்தல் கூட்டணி அமைக்க அதிமுக ஏன் முன்வராது என்பது குறித்து பேராசிரியர் சம்பத் கூறும்போது, "பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் முஸ்லிம் மற்றும் தலித் வாக்குகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் ஜெயலலிதா பாஜகவை தள்ளிவைக்கவே வாய்ப்பு அதிகம்.

மாநிலத்தின் பல்வேறு சிறு கட்சிகளும் பாஜகவுக்கு எதிராகவே இருக்கின்றன. இத்தகைய சூழலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் பல்வேறு சிறு கட்சிகளுடன் தேர்தல் உடன்படிக்கை ஏற்படுத்துவதை ஜெயலலிதா விலக்கி வைக்க வேண்டியிருக்கும். இத்தகைய பெரிய விலையை கொடுக்க கட்சி நிச்சயம் தயாராக இருக்காது. பாஜகவுடனான கூட்டணி ஆளுங்கட்சி மீதான அதிருப்தி வாக்குகளாக மாறும். இது எதிர்க்கட்சிக்கு வாக்குகளை வாரி வழங்கும் சூழலை உருவாக்கும். திமுக வலுவான கூட்டணியை இன்னும் ஏற்படுத்தாத சூழலில் அதிமுக இப்போதைக்கு தேர்தல் களத்தில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது. எனவே அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகமிகக் குறைவு" என்றார்.

அரசியல் விமர்சகர் ஆர்.மணி கூறும்போது, "பாமக, தேமுதிக தலைமைகளின் மிகைமிஞ்சிய சுயமதிப்பீடு தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் கட்டமைக்கமுடியாத சூழலையும் ஏற்படுத்தும். தேமுதிகவுக்கு இது அதி முக்கியமாக தேர்தல். இத்தேர்தலில் எந்தக் கட்சி தங்களுக்கு கணிசமான எம்.எல்.ஏ. சீட் தருகிறதோ அந்தக் கட்சியோடே கூட்டணி அமைக்க முன்வரும். தற்போதைய சூழலில் அத்தகைய வாக்குறுதியை பாஜகவால் தர இயலாது. தமிழக அரசியல் கள நிலவரத்தை உற்று நோக்கும்போது தேமுதிக எந்த நேரத்திலும் திமுகவுடன் கைகோக்க வாய்ப்பிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை" என்றார்.

பாமகவைப் பற்றிக் கூறும்போது எதிர்காலத்தில் தொகுதிகளுக்கான பேரத்தை மேம்படுத்துவதற்கான அடித்தளத்தை இப்போது அவர்கள் வலுப்படுத்தி வருகிறார்கள் எனக் கூறினார்.

அதிமுகவுடன் கூட்டணி!

அதேவேளையில் அதிமுக-பாஜக கூட்டணி அமையவே அமையாது என்று திட்டவட்டமாக கூறுவதற்கு இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் அடுத்த கட்ட நீதிமன்ற உத்தரவுகளும், 2ஜி வழக்கில் நீதிமன்றம் எடுக்கும் முடிவுகளும் தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணிகள் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்பதை மறுப்பதற்கில்லை. பிஹார் தேர்தல் முடிவும் தமிழக தேர்தல் கூட்டணியில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், ஒருவேளை அதிமுக பாஹகவை ஆதரித்தால் அக்கட்சிக்கு பெரும் பலம் ஏற்படும்" என்கிறார் அரசியல் விமர்சகர் மணி.

நிலவரங்கள் இப்படி இருக்க தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனோ, "வரவிருக்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அல்லாத வலுவான கூட்டணியை ஒருங்கிணைப்போம்" என உரக்கச் சொல்லி வருகிறார்.

தமிழில்:பாரதி ஆனந்த்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in