

மலர் மாலைகளைக் கட்டி வைத்தும் அவை விற்பனையாகாமல் குப்பையில் வீச வேண்டிய நிலைமை அடிக்கடி ஏற்பட்டதால், விரக்தியடைந்த வியாபாரி மனம் தளராமல் காசு மாலை, சாக்லெட் மாலை கட்டி விற்பனை செய்து, புதுமையான முயற்சியில் இறங்கியிருப்பது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
தென்காசி அருகே உள்ள சிவராமபேட்டையைச் சேர்ந்தவர் கருப்பசாமி(59). இவர், தென்காசியை அடுத்தகுத்துக்கல்வலசையில் மதுரை சாலையில் பூக்கடை நடத்தி வருகிறார். மலர்மாலை விற்பனை செய்யும் கடைகளுக்கு விளம்பரங்கள் தேவை இருக்காது.
அந்த வழியாகச் சென்றாலேமலர்களின் மணம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துவிடும். ஆனால், கருப்பசாமி தனது கடையில் தொங்கவிட்டுள்ள மாலைகளோ மணம் வீசுவதில்லை. ஆனால், அந்த வழியாகச் செல்வோர் அந்த மாலைகளைப் பார்த்து வியப்படைகின்றனர்.
நண்பரின் ஆலோசனை
ஒரு ரூபாய் நாணயங்கள் மற்றும் சாக்லெட்களால் மாலைகளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளார். மாலைகளில் புதுமையை ஏற்படுத்தியது குறித்து கருப்பசாமி கூறியதாவது:
கடந்த 30 ஆண்டுகளாக சிவராமபேட்டையில் மலர் மாலைகள், பூக்கள்வியாபாரம் செய்து வருகிறேன். கடந்த3 மாதத்துக்கு முன்பு குத்துக்கல்வலசையிலும் கடை ஆரம்பித்தேன். ஊரில் இருந்து 15 மாலைகள் கட்டி விற்பனைக்கு கொண்டு வந்தேன். தினமும் நான்கைந்து மாலைகள் மட்டுமே விற்பனையாயின. மலர் மாலைகளின் ஆயுட்காலம் ஒரு நாள்தான். விற்பனையாகாத மாலைகளை குப்பையில் வீசிச் சென்றேன். தொடர்ந்து இந்த நிலைமையே இருந்தது. எனது நண்பர் ஒருவர், தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லி ஆலோசனை கூறினார்.
நஷ்டம் ஏற்படாது
கடையநல்லூரில் வசிக்கும் பெருமாள்சாமி என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அவர், சுமார் 40 ஆண்டுகளாக மும்பையில்அச்சகத்தில் வேலை பார்த்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கடையநல்லூருக்கு வந்த அவர், மீண்டும் மும்பைக்கு திரும்பிச் செல்ல முடியாததால், கடையநல்லூரிலேயே தங்கிவிட்டார். அவர், ரூபாய் நாணயங்களில் மாலைகள் செய்திருந்தார். அவரிடம் ரூபாய் நாணயங்களால் ஆன 6 மாலைகள் செய்ய ஆர்டர் கொடுத்தேன். 10 நாட்களில் 6 மாலைகளை உருவாக்கினார். அதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.400 கூலி கொடுத்தேன். மேலும், நான் எனது சொந்த முயற்சியால் சாக்லெட் மாலைகளை தயாரித்தேன்.
ரூபாய் நாணயங்களால் ஆன மாலையை பல ஆண்டுகள் அப்படியேவைத்திருக்க முடியும். முதலீடு வீணாகாது. விற்பனையாகவில்லையே என்றும் கவலைப்படத் தேவையில்லை. விற்றால் லாபம் கிடைக்கும், விற்பனையாகாவிட்டால் நஷ்டம்ஏற்படாது. 900 ஒரு ரூபாய் நாணயங்கள் உள்ள பெரிய காசு மாலையை 2,500 ரூபாய்க்கும், 700 ஒரு ரூபாய் நாணயங்கள் உள்ள சிறிய காசு மாலையை 1,500 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறேன். இரண்டரை கிலோ சாக்லெட்களால் உருவாக்கிய சாக்லெட் மாலையை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். முன்னோர்களின் புகைப்படங்கள், பூஜையறையில் சுவாமி படங்களுக்கு அணிவிக்க இந்த மாலைகளை வாங்கிச் செல்கின்றனர்.
நாணயங்களால் மாலை உருவாக்கும் நுட்பத்தை நானும் கற்றுக்கொண்டு, சொந்தமாக தயாரிக்க முடிவு செய்துள்ளேன். 5 ரூபாய்நாணயங்கள், வண்ண உறைகள் கொண்ட சாக்லெட்கள் போன்றவற்றை பயன்படுத்தி மாலை தயாரிக்கவும், மாலைகளில் இன்னும் புதுமைகளை கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வீழ்வது தவறல்ல
வீழ்வது தவறல்ல, வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு என்று கூறுவது உண்டு. அதேபோல், தொழிலில் தொடர் நஷ்டத்தால் கவலையடைந்தாலும் மனம் தளராமல் புதுமையான முயற்சியை கடைபிடித்து, வெற்றிப் பாதைக்கு திரும்பிய மாலை கட்டும் தொழிலாளி கருப்பசாமியின் முயற்சியை பலரும் பாராட்டுகின்றனர்.