பொங்கலுக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாம்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

பொங்கலுக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாம்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
Updated on
1 min read

பொங்கலுக்குப் பிறகு தமிழக அரசு பள்ளிகளைத் திறக்கலாம் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நவ.16-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. கரோனா 2-வது அலை, வடகிழக்குப் பருவமழை தீவிரத்தால் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதால், பள்ளிகள் திறப்புக்கு எதிர்ப்புகள் எழுந்தன.

இதற்கிடையே பெற்றோரின் கருத்துகளை அறிந்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று அரசு அறிவித்து, கருத்துக் கேட்புக் கூட்டத்தையும் நடத்தியது. இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு குறித்துக் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், ''ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், கரோனா பரவல் அதிகரித்துள்ளது. பல நாடுகளில் கரோனா 2-ம் அலை பரவி வருகிறது.

நீதிபதிகள் உட்படப் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் குழந்தைகள், மாணவர்கள் பாதிக்கப்பட்டால் சிரமம் அதிகமாக இருக்கும். இதனால் டிசம்பர் மாதத்துக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் என நீதிமன்றம் கருதுகிறது'' என்று தெரிவித்தனர்

இந்நிலையில் இது தொடர்பாக இன்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வெளியிட்ட அறிக்கை:

''தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது சம்பந்தமான பொதுநல வழக்கு ஒன்றில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் இப்போது பள்ளிகள் திறப்பதைத் தள்ளிவைத்து டிசம்பரில் திறக்கலாம் எனத் தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். ஏற்கெனவே 7 மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதையே இன்னும் ஓரிரு மாதங்கள் தொடர்வதால் புதிதாகப் பிரச்சினை ஏதும் வந்து விடப்போவதில்லை.

அடுத்த மாதம் பொங்கல் வரை தொடர்ந்து விழாக்கள், விடுமுறைகள் வருகின்றன. கரோனா தொற்று இன்னும் பரவிக் கொண்டுதான் உள்ளது. இச்சூழலில் பெற்றோர்கள் மாணவ, மாணவியர் நலன் கருதி ஜனவரியில் பொங்கலுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கலாம் என்பதுதான் பொதுவான பலரது அபிப்பிராயமும், விருப்பமும் ஆகும. இதைத் தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in