

புதுச்சேரி அரசைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று (நவ.11) காரைக்காலில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்ட பாஜக சார்பில், மக்கள் விரோதச் செயல்பாடுகளை மேற்கொள்ளும் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசைக் கண்டித்தும், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும், மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தி ரேஷன் கடை ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மீட்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைப் பாஜகவினர் வலியுறுத்தினர்.
மேலும், வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள 33 மாதங்களுக்கான அரிசிக்கான தொகையை வங்கியில் செலுத்த வேண்டும், கூட்டுறவுத் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தைத் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உடனடியாக வழங்க வேண்டும், கான்ஃபெட் கூட்டுறவு நிறுவன பெட்ரோல் பங்குகளை மூடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கச் செய்யும் செயலைத் தடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் பாஜகவினர் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக, மதகடி பகுதியில் உள்ள சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சிலை அருகிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்ற பாஜகவினரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
கட்சியின் மாவட்டத் தலைவர் ஜெ.துரை சேனாதிபதி போராட்டத்துக்குத் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர்கள் அப்பு (எ) மணிகண்டன், செந்திலதிபன், மாநிலச் செயலாளர் சகுந்தலா உள்ளிட்ட சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.