

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநராகப் பணிபுரியும் முனைவர் கே.எஸ்.சுப்பிரமணியனுக்குத் தேசிய அளவிலான இந்திய உர உற்பத்தியாளர்கள் குழுமத்தின் பொன்விழா ஆண்டுக்கான விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் பணப் பரிசும், தங்கப் பதக்கமும் வழங்கப்படுகின்றன. இந்த விருது நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கும், அதன் மூலம் உருவாக்கப்பட்ட நானோ உரங்களினால் பயிர் உபயோகிக்கும் திறன் அதிகரித்து உரச் செலவைக் குறைக்க வழிவகுக்கும் திட்டத்திற்கும் கிடைத்த பரிசாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கை:
“முனைவர் கே.எஸ்.சுப்பிரமணியன் தலைமையில் 2010ஆம் ஆண்டில் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற புதிய துறை ஆரம்பிக்கப்பட்டது. இத்துறை கடந்த பத்து ஆண்டுகளாகப் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டு பல தொழில்நுட்பங்களைக் கண்டறிந்திருக்கிறது. இந்தத் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.
மேலும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் நீ.குமார் தந்த ஊக்கத்தின் காரணமாக, பழங்களைப் பாதுகாக்க எக்சானல், நானோ எமல்சன் மற்றும் நானோ ஸ்டிக்கர், நானோ சானிடைசர் இலையின் ஈறுத்தன்மையும், தழைச் சத்தையும் அறிய சென்ஸார்கள், கொடிய பூச்சி மற்றும் பூஞ்சாண நோய்களைக் கட்டுப்படுத்த புதிய வழிமுறைகள் என நானோ தொழில்நுட்பத்தின் பல்வேறு வடிவங்கள் செயல்முறைக்கு வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.