Last Updated : 11 Nov, 2020 04:21 PM

 

Published : 11 Nov 2020 04:21 PM
Last Updated : 11 Nov 2020 04:21 PM

முதல்வர் அறிவித்த பின்னரும் குமரியில் படகுப் போக்குவரத்தைத் தொடங்காததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்: முறையான உத்தரவு வராததால் வெள்ளோட்டம் மட்டுமே நடந்தது

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து தொடஙகும் எனத் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்த பின்னரும், இன்று படகுப் போக்குவரத்து நடைபெறாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கப்பல் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு முறையான உத்தரவு வராததால் படகுகளின் வெள்ளோட்டம் மட்டுமே நடந்தது.

தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கரோனா தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

அப்போது, கரோனா பாதிப்பிற்கு பின்பு முடங்கியிருந்த கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதைப்போல் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்து இன்று முதல் துவங்கும் என அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு இல்லம் முன்பு குவிந்தனர். ஆனால் வெகு நேரமாகியும் படகு இயக்குவதற்கான நடவடிக்கை இல்லை. இதனால் அங்கிருந்து ஏமாற்றத்துடன் சென்றனர்..

இதுகுறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தினரிடம் கேட்டபோது; விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு படகுகள் இயக்குவதற்கான முறையான உத்தரவு எதுவும் நிர்வாக தரப்பில் இருந்து தங்களுக்கு வரவில்லை. எந்நேரத்தில் உத்தரவு வந்தாலும் படகை இயக்க தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று ஏற்கனவே இருந்த பழைய படகுகளான குகன், விவேகானந்தா, பொதிகை ஆகியவற்றை படகு தளத்தில் இருந்து விவேகானந்தர் பாறைக்கு இயக்கி வெள்ளோட்டம் நடைபெற்றது.

படகு தளத்தை ஆழப்படுத்தும் பணி நடைபெறாததால் புதிய அதிநவீன படகுகளான திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய படகுகளின் வெள்ளோட்டம் நடைபெறவில்லை.

படகு தளத்திலே அவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், படகு போக்குவரத்து தொடங்கினால் மட்டுமே மீண்டும் சுற்றுலா மையமாக களைகட்டும்.

எனவே கன்னியாகுமரியில் முதல்வர் அறிவிப்பின்படி படகு சேவையை தாமதமின்றி தொடங்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x