

தூத்துக்குடியில் ரூ.367.75 கோடி திட்டப் பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரியில் நேற்று கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கிவைத்த தமிழக முதல்வர் இரவு நாகர்கோவிலில் தங்கினார்.
அங்கிருந்து கார் மூலம் இன்று காலை 8 மணிக்கு தூத்துக்குடி வந்தார். மறவன்மடத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் காலை உணவை முடித்த முதல்வர் காலை 9 மணிக்கு அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ 16 கோடியில் அமைக்கப்பட்ட புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் நேரியல் முடுக்கி என்ற நவீன கருவியின் செயல்பாட்டைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மேலும், மருத்துவக் கல்லூரியில் ரூ.71. 61 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மத்திய ஆய்வக கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் கே. பழனிசாமி மேடையில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவர் 15 ஆயிரத்து 792 பயனாளிகளுக்கு ரூ. 37.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் ரூ. 328.60 கோடி மதிப்பிலான 29 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இதுதவிர ரூ. 22.37 கோடியில் முடிவுற்ற 16 திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடக்கி வைத்தார்.
பின்னர் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாவட்டத்தில் உள்ள விவசாய சங்கப் பிரதிநிதிகள், மீனவ சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், சிறு, குறு தொழில் முனைவோருடன் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கடம்பூர் செ. ராஜூ, சி. விஜயபாஸ்கர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி. சண்முகநாதன், பி.சின்னப்பன் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே ரவுடியை பிடிக்கச் சென்றபோது வெடிகுண்டு வீசியதில் வெடிகுண்டு வீசியதில் மரணமடைந்த காவலர் சுப்பிரமணியன் மனைவி புவனேஸ்வரிக்கு அரசுப் பள்ளியில் இளநிலை உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணை மற்றும் ரூ.50 லட்சத்திற்கான நிதியுதவியை முதல்வர் வழங்கினார்.