Published : 11 Nov 2020 10:58 AM
Last Updated : 11 Nov 2020 10:58 AM

பிஹார் தேர்தல் தொடர்பான முறைகேட்டுப் புகார்கள் அதிர்ச்சியளிக்கின்றன: ஸ்டாலின் 

சென்னை

பிஹார் தேர்தல் தொடர்பான முறைகேட்டுப் புகார்கள் அதிர்ச்சியளிக்கின்றன; தலையீடுகளின்றி நியாயமான, நடுநிலையான, சுதந்திரமான முறையில் நடத்தப்படும் தேர்தலால் மட்டுமே ஜனநாயகத்தின் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

''பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் முதல்வர் நிதிஷ் குமாருக்கு, திமுக சார்பில், மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிஹாரின் இளம் தலைவராக உருவெடுத்து, மக்களின் ஆதரவோடு உயர்ந்துவரும் தேஜஸ்வி யாதவ் தலைமையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி இந்தத் தேர்தலில் அதிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ள தனிப் பெரும் கட்சியாக பிஹாரில் வெற்றி பெற்றிருப்பது, அந்த மாநிலத்தின் ஜனநாயகத்திற்கு நல்ல உயிரோட்டத்தையும், துடிப்பான ஊக்கத்தையும் அளித்திடக் கூடியது.

‘கரோனா’ காலத்தில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலையும், பல மாநிலங்களில் இடைத் தேர்தலையும், தேர்தல் ஆணையம் நடத்தியிருப்பது இந்திய ஜனநாயகத்தின் வலிவையும் பொலிவையும் பிரதிபலிக்கிறது. ‘மகாகத்பந்தன்’ கூட்டணி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைகேட்டுப் புகார்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. தேர்தல்கள் எந்தவிதத் தலையீடுமின்றி, நியாயமாக, நடுநிலையுடன், சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும் என்பதே இன்றைய தினம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த எதிர்பார்ப்பு முழுமையாக நிறைவேறினால்தான், நமது நாட்டில் ஜனநாயகத்தின் வளமான எதிர்காலம் உறுதிப் படுத்தப்படும் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும் எனப் பெரிதும் விரும்புகிறேன்''.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x