Last Updated : 11 Nov, 2020 03:17 AM

 

Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM

அடுத்தடுத்து வரும் தடைகளால் தள்ளாடும் பட்டாசுத் தொழில்: குழப்பத்தில் உற்பத்தியாளர்கள்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, கரோனா பரவல் அச்சம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்துள்ள தடை உத்தரவு என அடுத்தடுத்து வரும் நெருக்கடிகளால் சிவகாசி பட்டாசுத் தொழில் நலிந்து வருகிறது. தொடர்ந்து, உற்பத்தியை மேற்கொாள்ளவும், உற்பத்தி செய்து குவித்துள்ள பட்டாசுகளை விற்கவும் முடியாமலும் உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் பரிதவித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சுமார் ஆயிரத்து 70 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. 2015-ம் ஆண்டு நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 2018 அக்டோபர் 23-ம் தேதி இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பட்டாசு தயாரிக்க பேரியம் பயன்படுத்தக் கூடாது என்றும், சரவெடிகள் தயாரிக்கக் கூடாது என்றும், புகை, ஒலி குறைந்த அளவுள்ள பசுமைப் பட்டாசுகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனால், வழக்கமான முறையில் தயாரிக்கப்பட்டு வந்த பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்தனர். மேலும், பசுமை பட்டாசு குறித்து தெளிவான விளக்கம் இல்லாததால் 3 மாதங்களுக்கும் மேலாக பட்டாசு ஆலைகள் அடைக்கப்பட்டிருந்தன.

அதன்பின்னர், கடந்த ஆண்டு மார்ச்சில் "நீரி" எனப்படும் தேசிய சுற்றுச்சூழல் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவன நிபுணர்கள் சிவகாசியில் பசுமை பட்டாசுக்கான புதிய பார்முலாவை ஆய்வு செய்து, பின்னர் பல கட்ட சோதனைக்கு உட்படுத்தி பேரியம் நைட்ரேட் அளவைக் குறைத்து அதற்கு மாற்றாக ஜியோலேட் உள்ள்ளிட்ட சில ரசாயனக் கலவைகளை சேர்க்கும் புதிய பார்முலாவை வழங்கினர்.

அதைக்கொண்டு, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் பசுமை பட்டாசு தயாரிக்கும் பணி சிவகாசியில் உள்ள ஆலைகளில் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், இந்த ஆண்டு கரோனா அச்சம் காரணமாக புதுடெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் காற்று மாசு அதிகம் உள்ள திருச்சி, தூத்துக்குடி நகரங்களில் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்க வேண்டும் என்றும் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட இனிவரும் பண்டிகைகளின்போது இக்கட்டுப்பாடுகளை கண்டிப்பாக மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் தொடர்ந்து பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர் சங்க முன்னாள் தலைவர் ஏ.பி.செல்வராஜன் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு முதல் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே தயாரிக்கிறோம். ஆனால், இந்த ஆண்டும் டெல்லியிலும் ஒருசில மாநிலங்களிலும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது ஏன் என்பது புரியவில்லை.

கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு 60 முதல் 70 சதவீதம் உற்பத்தி குறைந்துள்ளது. தொழிலில் தொடர்ந்து நிரந்தரமில்லாத நிலையே நீடிக்கிறது. இத்தொழிலை நம்பியுள்ள சுமார் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x