

``கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அங்கிருந்து வருவோரை மாநில எல்லையில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே தமிழகத்துக்குள் அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முதல்வர் பழனிசாமி நேற்று நாகர்கோவில் வந்தார். ரூ.268 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளையும், புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்தார். 2,736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா நோய் பரவல் படிப்படியாக குறைந்துள்ளது. ஆனால், அருகிலுள்ள கேரளாவில் நோய் பரவல் அதிகமாக உள்ளது. எனவே, கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வருவோரை கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதன்பிறகே, தமிழகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
காமராஜர் ஆட்சியில் இடம்பெற்ற ஒரே பெண் அமைச்சர் லூர்தம்மாள் சைமன். அவருக்கு பெருமைசேர்க்கும் வகையில் கன்னியாகுமரி மணக்குடி மேம்பாலத்துக்கு, `லூர்தம்மாள் சைமன் பாலம்’ என பெயர் சூட்டப்பட்டுஉள்ளது. கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தடை நீக்கப்பட்டுள்ளது. 2 புதிய நவீன படகுகளுடன் படகு போக்குவரத்தும் தொடங்கப்படும்.
பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு உயரதிகாரிகள், அமைச்சர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆய்வு முடிவில் பள்ளிகள் திறப்பு குறித்து குறித்து முறையாக அறிவிக்கப்படும். இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட படகுகளில் நல்ல நிலையில் உள்ள படகுகள் எடுத்து வரப்பட்டுள்ளன. எடுத்து வரமுடியாத படகுகள் பழுதாகி இருப்பதால் அதை அங்குள்ள நீதிமன்ற வழிகாட்டுதல்படி அழிப்பதாக கூறியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோய் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நெய்யாறு இடதுகரை கால்வாய்க்கு தண்ணீர் திறப்பது குறித்து, கேரள அரசுடன் இரண்டு மூன்று கட்டமாக பேசியுள்ளேன். இதுபோன்று, தமிழகத்தில் உள்ள நதிநீர் பிரச்சினைகள் குறித்து பேசி வருகிறோம். விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.
விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், ஆட்சியர் எம்.அரவிந்த் பங்கேற்றனர். நாகர்கோவிலில் நேற்று இரவு தங்கிய முதல்வர், இன்று காலை தூத்துக்குடியிலும், மதியம் விருதுநகரிலும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.