அமைச்சர் துரைக்கண்ணு வீட்டில் சோதனை நடந்தது ஏன்?- திமுக எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் கேள்வி

அமைச்சர் துரைக்கண்ணு வீட்டில் சோதனை நடந்தது ஏன்?- திமுக எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் கேள்வி
Updated on
1 min read

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருவையாறு தொகுதி எல்எல்ஏவுமான துரை.சந்திரசேகரன், தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எவ்வாறு மர்மம் இருந்ததோ, அதேபோல அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணத்திலும் மர்மம் உள்ளது. அவரது மரணம் விசாரிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஒரு வாரமாக மருத்துவமனையிலிருந்து எந்த அறிவிப்பும் இல்லையே. அது மர்மம் இல்லையா?. ஒரு அமைச்சரின் வீட்டில், அதுவும் அவர் இறந்த அன்றைக்கு எதற்காக ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு என்ன காரணம்?.

ரகசிய விசாரணை

அமைச்சர் துரைக்கண்ணுவுடனும், அவரது மகனுடனும் நெருக்கமாக தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் அழைத்து போலீஸார் ரகசியமாக விசாரிக்கின்றனர். இதற்கு காரணம் என்ன?. அனைத்தும் மர்மமாக உள்ளது.

ஒரு பெரிய தொகை அவரிடம் வழங்கப்பட்டதாகவும், மருத்துவமனையில் நினைவிழந்ததால் அது குறித்து எதுவும் தெரியாமல் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அமைச்சர் இறந்ததாக அறிவித்து, அவரது மகன் அமைச்சரின் உடலுடன் சென்னையில்இருந்து வந்துகொண்டிருந்த போது, ராஜகிரியில் உள்ள அமைச்சர் வீட்டை 20 போலீஸார் மப்டியில் சென்று சோதனையிட வேண்டிய அவசியம் என்ன?. எதற்காக சோதனை நடத்தப்பட்டது, அதில் என்ன கிடைத்தது என்பதை ஏன் இதுவரை அரசு அறிவிக்கவில்லை.

ரூ.300 கோடி பணம்

அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் பாபநாசத்தில் நடந்தபோது துரைக்கண்ணுவின் வீட்டில் ரூ.300 கோடி பணம்வைக்கப்பட்டுள்ளது என அதிமுகவினரே துண்டுப்பிரசுரம் கொடுத்தார்கள். இதுகுறித்து அரசு விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in