

கோவை மாநகரில் அதிகளவில் விபத்துகள் ஏற்படும் 15 இடங்களை ‘பிளாக் ஸ்பாட்’ ஆக தேர்வு செய்து காவல், போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
பெருகிவரும் விபத்து, உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்க காவல் துறையினர் மாநகர் முழுவதும் சர்வே செய்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக பதிவான விபத்துகள், உயிரிழப்புகள் எண்ணிக்கை, அது நிகழ்ந்த பகுதிகள் போன்றவை குறித்து ஆய்வு செய்த னர். அதன்படி, அதிகளவில் விபத்து ஏற்படும் 15 இடங்களை ‘பிளாக் ஸ்பாட்’ என வகைப்படுத்தியுள்ளனர். அந்த இடங்களில் விபத்துகளை குறைக்க அரசு துறைகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மாநகர காவல் துறையின் புள்ளி விவரப்படி, கடந்த 2018-ம் ஆண்டு 149 உயிரிழப்பு விபத்துகள், 987 உயிரிழப்பற்ற விபத்துகள், 2019-ம் ஆண்டு 126 உயிரிழப்பு விபத்துகள், 936 உயிரிழப்பற்ற விபத்துகள், நடப்பாண்டு ஜனவரி முதல் அக்டோபர் இறுதி வரை 52 உயிரிழப்பு விபத்துகள், 494 உயிரிழப்பற்ற விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
போக்குவரத்து காவல் துறை துணைஆணையர் முத்தரசு கூறும்போது, ‘‘அவிநாசி சாலையில் அண்ணா சிலை சந்திப்பு, ஹோப் காலேஜ், கே.எம்.சி.ஹெச் சந்திப்பு, சிட்ரா, கோல்டு வின்ஸ், திருச்சி சாலையில் வசந்தாமில் சந்திப்பு, சிங்காநல்லூர் சந்திப்பு, எல் அன்ட் டி பைபாஸ் சாலை, கிளாசிக் டவர் சந்திப்பில் இருந்து உக்கடம் -சுங்கம் பைபாஸ் சாலை இணையும் பகுதி, போத்தனூர் பொங்காளியம்மன் கோயில் சாலை, ஜி.டி. டேங்க் ஏரியா, மேட்டுப்பாளையம் சாலையில் பூமார்க்கெட், அழகேசன் சாலை, சத்தி சாலையில் காந்திபுரம், சரவணம்பட்டியில் தனியார் மால் வளாகம் சந்திப்பு ஆகிய இடங்கள் அதிகளவில் விபத்துகள் ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் மாநகர காவல் துறையினர், வட்டாரப் போக்குவரத்து துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் ஆகியோர் இணைந்து ஆய்வு நடத்த உள்ளோம். அங்கு விபத்து ஏற்படுவதற்கான காரணம், அதை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி முடிவு செய்து, அதற்கேற்ப திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.