

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெறுவதால், பழைய பேருந்து நிலையம், யுனிவர்சல் திரையரங்கம், கோவில்வழி, ஆட்சியர் அலுவலகம் எதிரில் என 4 பகுதிகளாக தற்காலிக பேருந்து நிலையங்கள் பிரிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் செயல்பட்டுவந்த உடுமலை,பொள்ளாச்சி, கோவை பேருந்து நிலையங்கள், எந்தவித முன்னறிவிப்பின்றி பழைய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மட்டுமின்றி வாகன ஓட்டுநர்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக தினசரி பயணிகள் சிலர் கூறும்போது, "திடீரென இந்த தற்காலிக பேருந்து நிலையம்9-ம் தேதி முதல் பழைய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தீபாவளி நேரம் என்பதால் ஏற்கெனவே அங்கு நிறுத்தப்படும் பேருந்துகள் மட்டும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன. தற்போது, இந்த பேருந்துகளும் நிறுத்தப்படுவதால், அந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டம் அதிகம் இருக்கும் இடமாக பழைய பேருந்து நிலையப் பகுதி மாறியுள்ளது.
உடுமலை, பொள்ளாச்சி, கோவை செல்லும் பேருந்துகள் திடீரென பழைய பேருந்து நிலையத்தில் இருந்து செல்வதால், பயணிகள் பலரும் குழப்பமடைந்துள்ளனர். இங்கு போதிய இட வசதியை ஏற்படுத்தும் வரை, ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்கலாம்" என்றனர்.
போதிய இடம் இல்லை
அரசுப் பேருந்து நடத்துநர்கள் சிலர் கூறும்போது, "ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் நாளுக்கு நாள் திருப்பூர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. தற்போது பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்குவது என்பது மிகுந்த சிரமம்தான். அங்கு ஏற்கெனவே பேருந்துகள் நிறுத்த போதிய இடம் இல்லை. அதிலும் முகூர்த்த நாட்களில், திருப்பூர்- கோவை சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. கோவையில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், வாகனங்களை இயக்க மிகுந்த தாமதம் ஏற்படுகிறது. அதேபோல, அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றன. ஆட்சியர் அலுவலகம் எதிரிலேயே உடுமலை, பொள்ளாச்சி, கோவை பேருந்துகளை இயக்கலாம்" என்றனர்.
மாநகராட்சி அலுவலர் ஒருவர்கூறும்போது, "இதற்கும், மாநகராட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை " என்றார்.
மாவட்ட போக்குவரத்துத் துறை அலுவலர் கூறும்போது, "ஆட்சியர்அலுவலகம் எதிரே செயல்பட்டுவந்த பேருந்து நிலையம், தற்போதுபழைய பேருந்து நிலையத்துக்கேமாற்றப்பட்டுள்ளது. போக்குவரத்துபோலீஸார் அங்கு மாற்ற கூறியதால் மாற்றியுள்ளோம். பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் இடத்தைக் கொண்டு பேருந்துகளை இயக்கி வருகிறோம்" என்றார்.