

தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் உள்ள தலித்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தலித்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்கள் பல்வேறு துயரங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். அண்மையில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த காவல்துறை இளம் அதிகாரி விஷ்ணுபிரியா, உயர் அதிகாரிகள் கொடுத்த தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். இது தமிழகத்தையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
தேசியக் குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் தமிழக சிறைகளில் இருப்பவர்களில் 53 சதவீதம் பேர் தலித்கள் என்பது தெரிய வந்துள்ளது. எவ்வித காரணமும் இல்லாமல் அவர்களை நீண்டகாலம் சிறையில் அடைத்து வைத்திருப்பதற்கு தமிழக அரசு பதில் சொல்லியாக வேண்டும்.
தமிழகத்தில் தலித்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக தேசியக் குற்ற ஆவண காப்பகம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, தலித்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்தும், தடுப்புக் காவலில் சிறையில் தலித்கள் குறித்தும் உண்மை நிலையை அறிய தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் இளங்கோவன் கூறியுள்ளார்.