

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை விமர்சித்து ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் வெளியிட்டுள்ள வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும், நீதிமன்ற ஊழியர்களையும் ஆபாசமாக விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதுதொடர்பாக அவருக்கு எதிராக சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அவர் பதிவிட்டுள்ள வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க கோரியும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் சி.ராஜாகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் நீதித் துறையை பாதுகாக்க வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனின் இதுபோன்ற விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவர் ஏற்கெனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்.
அரசியல் சாசன ரீதியாக முக்கியமான பதவி வகித்த அவர் நீதித்துறையில் உயர் பதவி வகிக்கும்நீதிபதிகள் குறித்தும் மூத்த பெண்வழக்கறிஞர்கள் குறித்தும் நீதித்துறை ஊழியர்கள் குறித்தும் இதுபோல தொடர்ந்து அவதூறாக பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும்.
அத்துடன் அவர் வெளியிட்டுள்ள வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும். மேலும் அவர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள்சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பார் கவுன்சில் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, ‘ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் இதுபோல 12-க்கும் மேற்பட்ட வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் வீட்டுக்குள் நீதிபதி கர்ணனின் ஆதரவாளர்கள் அத்துமீறி சென்றது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் நீதிபதி கர்ணன் மீது தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
நீதிபதிகள் அதிருப்தி
அதையடுத்து நீதிபதிகள், சமூக வலைதளங்களில் சாதாரணநபர்கள் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டால் உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு, இந்த விஷயத்தில் கண்டும் காணாததும் போல உள்ளது என அதிருப்தி தெரிவித்தனர்.
பின்னர், முக்கியமான அரசியல் சாசன பதவி வகித்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன், இதுபோல தரம்தாழ்ந்து உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றத்தின் இந்நாள் மற்றும் முன்னாள் நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், பெண்வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களை ஆபாசமாக விமர்சிப்பது என்பது பெண்களுக்கு எதிரானபாலியல் குற்றங்கள் தடுப்புச்சட்டத்தின்கீழ் தண்டனைக்குரிய குற்றம் என கருத்து தெரிவித்தனர்.
டிச.16-க்குள் பதில்
அதன்பிறகு இதுதொடர்பாக கர்ணன் வெளியிட்டுள்ள வீடியோக்களை உடனடியாக அகற்ற சமூக வலைதளங்களுக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர், சைபர் க்ரைம் உதவி ஆணையர், முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் ஆகியோர் வரும் டிச.16-க்குள் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளனர்.