

பறவைகள், அணிகளால் சேதம் ஏற்படாமல் தடுப்பதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் சோளக் கதிர்களை பிளாஸ்டிக் கவர்களால் மூடி விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 8,000 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு உள்ளது. ஓரளவுக்கு லாபம் தரக்கூடியதாக இருப்பதால் இதை விவசாயிகள் ஆர்வத்தோடு பயிரிட்டு வருகின்றனர்.
சோளம் பயிராக இருக்கும் போது, அமெரிக்கன் படைப்புழு தாக்குவதாலும், கதிர் விட்ட பிறகு அணில், பறவைகள் சேதம் ஏற் படுத்துவதாலும் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து புழுவைக் கட்டுப்படுத்தினாலும் அணில், பறவைகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடிவதில்லை.
இதற்கும் தீர்வுகாணும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு, வடகாடு பகுதியில் 10 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சோளப் பயிர்களில் கதிர்களை பிளாஸ்டிக் கவர்களைக் கொண்டு மூடி விவசாயிகள் பாதுகாத்து வருகின் றனர். இதன்மூலம் அணில், பறவைகளால் பாதிப்பு ஏற்படாது என விவசாயிகள் கூறுகின்றனர்.
இது குறித்து மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறியது: அமெரிக்கன் படைப் புழு தாக்குதலுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து ஓரளவு கட்டுப்படுத்தி வருகிறோம். ஆனால், சோளத்தில் கதிர்விட்ட பிறகு கிளி, மயில் போன்ற பறவைகள், அணில்கள் கதிர்களை கொத்தி மகசூலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
மழைக்காலத்தில் கதிர்களில் சேதப்படுத்தப்பட்ட பகுதி வழியே மழைநீர் உட்செல்வதால் கதிரில் மீதமுள்ள சோளமும் அழுகி விடுகிறது. இதனால், ஏக்கருக்கு 4 டன் சோளம் விளையும் இடத்தில் ஒரு டன்னுக்குக்கூட உத்தரவாதம் கிடைப்பதில்லை.
இத்தகைய இழப்பு ஏற்படு வதைத் தடுப்பதற்காக சோளக் கொல்லையில் அனைத்து கதிர்களுக்கும் பிளாஸ்டிக் கவர்களை மாட்டிவிடுகிறோம். இதனால் 100 சதவீதம் பாதிப்பு தடுக்கப்படுகிறது. எனினும், கதிர் முதிர்ச்சி அடைவதில் பாதிப்பு இருக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது என்றனர்.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராம.சிவக்குமார் கூறியதாவது:
சோளப் பயிர்களைத் தாக்கும் அமெரிக்கன் படைப்புழுவைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், சோளக் கதிர்களை பிளாஸ்டிக் கவர்களால் மூடுவதால் கதிர்கள் முதிர்ச்சி அடைவதில் பாதிப்பு ஏற்படாது. பொதுவாக புதிய ரகம் கண்டுபிடிக்கும்போதும், பெருக்கம் அடையச் செய்யும் போதும்கூட கலப்பினம் உருவாகி விடக்கூடாது என்பதற்காக இது போன்ற முறைகளை கடைபி டிப்பது உண்டு என்றார்.