

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்குத் தடை விதித்தால் 50 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு, ரூ.15 கோடி மதிப்பில் வர்த்தகம் முடங்கும் என வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதாகக் கூறி, திருவண்ணாமலையில் கடந்த 8 மாதங்களாக 'பவுர்ணமி கிரிவலம்' செல்ல பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தடை விதித்துவிட்டது. இதனால், அண்ணாமலையார் கோயிலில் உலகப் புகழ்பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா வழக்கம்போல் நடைபெறுமா? என பக்தர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் 17-ம் தேதி தொடங்க உள்ள தீபத் திருவிழா, தொடர்ந்து 17 நாட்களுக்கு நடைபெறும். பஞ்சமூர்த்திகளின் மாட வீதி உலா, நாயன்மார்கள் வீதி உலா, வெள்ளித் தேரோட்டம், மகா தேரோட்டம், பிச்சாண்டவர் உற்சவம், பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றுதல், கிரிவலம், தெப்பல் உற்சவம் என திருவண்ணாமலை நகரமே ஆன்மிக விழாக் கோலம் பூண்டியிருக்கும்.
17 நாள் விழாவில், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 32 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள். மகா தீபத்தன்று மட்டும் 15 லட்சம் பக்தர்கள் திரண்டு, கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம்.
தீபத் திருவிழாவுக்கு திரளும் பக்தர்களால் நடைபாதை வியாபாரிகள் முதல் பெரிய வணிக நிறுவன உரிமையாளர்கள் வரை பயனடைவர். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் பிழைக்கின்றனர். இந்த நிலையில், கரோனா தொற்றைக் காரணம் காட்டி கார்த்திகை தீபத் திருவிழாவை, கோயிலுக்கு உள்ளேயே மிக எளிமையாக நடத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளதால், ஓட்டுமொத்த வணிகமும் அடியோடு பாதிக்கும் என அனைத்து நிலை வணிகர்களும் அச்சமடைந்துள்ளனர்.
ஏற்கெனவே, கரோனா தொற்றால் பல மாதங்கள் கடைகள் மூடப்பட்ட நிலையில், தீபத் திருவிழாவுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டால், வாழ்வாதாரம் முடங்கிப் போகும் எனக் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ராஜசேகர் கூறும்போது, "மாதந்தோறும் நடைபெறும் கிரிவலத்தை நம்பி நடைபாதை வியாபாரிகள், வணிகர்கள் உள்ளனர். கடந்த 8 மாதங்களாக பவுர்ணமி கிரிவலத்துக்குத் தடை விதித்துள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இப்போது, கார்த்திகை தீபத் திருவிழாவும் வழக்கம்போல் நடைபெறவில்லை என்றால், மேலும் ஒரு பேரிழப்பைச் சந்திக்க நேரிடும். திரையரங்குகளைத் திறந்துள்ளனர். மக்களும் இயல்பு வாழ்க்கை வாழ்கின்றனர். அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் உள்ளது.
எனவே, ஆன்மிகத் திருவிழாவான கார்த்திகை தீபத் திருவிழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்தலாம். சாமி வீதியுலா, மகா தேரோட்டம் என அனைத்தும் வழக்கம்போல் நடத்த வேண்டும். கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்க வேண்டும்.
கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களை நம்பி திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள், நூற்றுக்கணக்கான டீக்கடைகள், 200 உணவகங்கள், 250 தங்கும் விடுதிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டியில் சிற்றுண்டிக் கடைகளை நடத்துபவர்கள் மற்றும் 20 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அடங்குவர்.
தீபத் திருவிழா தடைப்பட்டால், சுமார் 50 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கும். ரூ.15 கோடி மதிப்பில் நடைபெறும் வர்த்தகம் முடங்கிப்போகும். எனவே, நடைபாதை வியாபாரிகள் உட்பட வணிகர்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு, கட்டுப்பாடுகளுடன் கார்த்திகை தீபத் திருவிழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.