

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் ஜாமீன் மனுக்களை விசாரிக்க மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு தான் அதிகாரம் உள்ளது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், 2 சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தென் மாவட்டங்களுக்கான சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ளது. மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் தான் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் கைதானவர்களில் சிலர் தூத்துக்குடி மாவட்டத்திலும், சிலர் மதுரை சிபிஐ நீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இதனால் ஜாமீன் மனுவை விசாரிக்கும் அதிகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு தூத்துக்குடி மாவட்ட நீதிபதி உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் அனுப்பினார்.
இது தொடர்பான வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், பாரதிதாசன் சிறப்பு அமர்வு விசாரிதது, சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை மதுரை முதன்மை மாவட்ட நீதித்துறை நடுவர் தான் விசாரிக்க வேண்டும். அவருக்கு தான் ஜாமீன் மனுவை விசாரிக்கும் அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டனர்.