Last Updated : 10 Nov, 2020 04:43 PM

 

Published : 10 Nov 2020 04:43 PM
Last Updated : 10 Nov 2020 04:43 PM

காவல் நிலையம் வரும் மக்களை போலீஸார் மரியாதையுடன் நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

காவல்நிலையத்துக்கு வரும் பொதுமக்களை மரியாதையுடனும், தோழமையுடனும் போலீஸார் நடத்த வேண்டும். இது தொடர்பாக டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் ஜூலை 2 முதல் 130 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். அவரது உடல் நலனை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.

சிபிஐ தரப்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியாகவுரி வாதிடுகையில், தந்தை, மகன் கொலையில் மனுதாரர் முக்கிய குற்றவாளி. அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. ஜாமீன் வழங்கினால் சாட்சிகள கலைக்க வாய்ப்புள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
காவல் நிலையங்களில் நடைபெறும் மரணங்கள் மனிதத்தன்மை அற்றவை. ஜனநாயகத்துக்கு எதிரானவை. காவல் நிலைய மரணங்கள் முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும்.

பொதுமக்களுக்கு சேவையாற்றும் அரசு துறைகளில் பொதுமக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். அரசு ஊழியர்கள், அதிலும் குறிப்பாக காவல்துறையினர் பொதுமக்களிடம் மரியாதையுடனும், தோழமையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இந்த அணுகுமுறை இல்லாததால் மக்கள் காவல் நிலையம் செல்ல அஞ்சுகின்றனர்.

காவல் நிலையத்தில் பொதுமக்களை மோசமாக நடத்துவது, காரணம் இல்லாமல் நீண்ட நேரம் காக்க வைப்பது போன்றவற்றை தவிர்கக வேண்டும். புகார் அளிக்க வருவோரின் உரிமைகள் குறித்து அனைத்து காவல் நிலையங்களில் முன்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தகவல் பலகை வைக்க வேண்டும். அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி, அந்த கேமராக்கள் முறையாக இயற்குவதை உறுதிப்படுத்த வேண்டும். விதிகளை மீறுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக டிஜிபி அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள் அதிகளவில் நடக்கின்றன. இதனால் இந்த வழக்கில் டிஜிபி எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார்.

மனு தள்ளுபடி:

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மனுதாரர் சிபிஐ விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x