

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்காக ஒதுக்கப்படும் இடங்களில் குளறுபடிகள் நடைபெறுவதாகவும், இதனைத் தடுக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.ஹெச்.நாஜிம் இன்று (நவ. 10) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் காரைக்காலில் உள்ள ஜிப்மர் கிளை ஆகியவற்றில் மொத்தம் 64 இடங்கள் புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இதில் ஒவ்வொரு ஆண்டும் பலவிதக் கோளாறுகள் நடைபெற்று வருகின்றன. இதனை அவ்வப்போது தொடர்ந்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறோம். ஆனால், அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அந்தக் குளறுபடிகள் தொடர்கின்றன.
நிகழாண்டு, ஜிப்மர் நிர்வாகம், புதுச்சேரி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 64 இடங்களில் சுமார் 31 இடங்களில் ஆந்திரா, தெலங்கானா பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏனாம் பிராந்தியம் மூலமாக உள்ளே புகுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் புதுச்சேரி பெற்றோர்கள் மத்தியில் ஒருவித பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து புதுச்சேரி முதல்வர் நேரடியாகத் தலையிட வேண்டும். ஏற்கெனவே இதுகுறித்து திமுக சார்பில் பேசப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்களின் பெயர் புதுச்சேரி மாணவர்களுக்கான பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. புதுச்சேரி மாணவர்களுக்கு இதைவிட ஆபத்து எதுவும் இருக்க முடியாது.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் இதில் எங்கே தவறு நடந்துள்ளது என்பதைக் கண்டறிந்து, சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, அந்த 31 இடங்களையும் புதுச்சேரி மண்ணைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெற்றுத் தரவில்லை என்றால், ஜிப்மர் எதிரில் திமுக சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்துவது என, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 3 திமுக அமைப்பாளர்களும் பேசி முடிவெடுத்துள்ளோம்.
இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதன் பின்னணியில் ஒரு அமைச்சரே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு அவர்கள் மாநில மக்களுக்கு அடையாளம் காட்டப்பட வேண்டும்".
இவ்வாறு ஏ.எம்.ஹெச்.நாஜிம் தெரிவித்தார்.